2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.2819.78 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம்: அமைச்சர்கள் அடிக்கல் நாட்டுகின்றனர்

ராமநாதபுரம், மே 27: கடந்த 2009-2010 ஆண்டில் திமுக அரசால் ரூ.616 கோடி மதிப்பில் காவிரி-ராமநாதபுரம் கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக திருச்சி மாவட்டம், ரங்கம் அருகே உள்ள முத்தரசநல்லூர் பகுதி காவிரி ஆற்றில் 4 ராட்சத கிணறுகள், நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அதிலிருந்து ராட்சத குழாய்கள் மூலமாக புதுக்கோட்டை, சிவகங்கை வழித்தடத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அப்போது நாள் ஒன்றிற்கு 100 எம்.எல்.டி தண்ணீர் வழங்கப்பட்டதால் 3 மாவட்டத்தை சேர்ந்த சுமார் 16 லட்சம் மக்கள் பயன்பெற்று வந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரத்து 300 கிராமங்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் முறையான பராமரிப்பின்மை, ஆங்காங்கே குழாய் சேதம், முறைகேடான இணைப்பு போன்ற காரணங்களால் கடந்தாண்டு வரை 75 எம்.எல்.டி க்கு கீழான அளவில் தண்ணீர் வந்தது.இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்திரவின் பேரில் கடந்தாண்டு ஜூன் மாதம் திருச்சி நீரேற்ற நிலையம் முதல் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வரை நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர், முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இருந்த போதிலும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் பிரத்தியேகமாக குழாய் அமைத்து நேரடியாக தண்ணீர் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி கரூர் மாவட்டம். நஞ்சை புகலூர் காவிரி ஆற்றுப்படுகையிலிருந்து ரூ.2819.78 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ராமநாதபுரத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில்அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அடிக்கல் நாட்டி இந்த திட்டத்தை துவக்கி வைக்கின்றனர். இதனால் ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட நகராட்சிகள்.

சாயல்குடி, கமுதி, அபிராமம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பேரூராட்சிகள். கடலாடி, போகலூர், நயினார்கோயில் உள்ளிட்ட 11 யூனியன்களில் 429 கிராம பஞ்சாயத்துகள் என 2,306 குடியிருப்பு கிராமங்கள் வரை பயன்பெறும். மேலும் சாயல்குடியில் ரூ.1.91 கோடி மதிப்பில் புதியதாக அமைக்கப்பட்ட வாரச்சந்தையினையும் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.மேலும் இந்நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு சந்திரன், திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

Related posts

கட்டிட மேஸ்திரி வீட்டில் 10 கிராம் நகை திருட்டு

மாணவர் சேர்க்கைக்கு 20ம்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

நவீன கருவி பொருத்திய 200 ஹெல்மேட் விநியோகம்