காரைக்குடியில் ரூ.140 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு: அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், கே.என்.நேரு துவக்கி வைக்கின்றனர்

காரைக்குடி, மே 27: காரைக்குடி நகராட்சியில் ரூ 140.13 கோடி மதிப்பில் முடிவுற்ற பாதாளசாக்கடை திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோர் இன்று துவக்கி வைக்கின்றனர். இது குறித்து என்று காரைக்குடி நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற சீரிய கொள்கையில் அனைத்து துறைகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன. உள்ளாட்சி துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி முதல்வர் நிதி ஒதுக்கி வருகிறார்.

இந்நகராட்சியை பொறுத்தவரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன்.நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஆகியோரின் உறுதுணையுடன் கூடுதல் நிதி பெறப்பட்டு, தேவையான அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.54 கோடிக்கு மேல் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. சிறுபாலங்கள், கால்வாய்கள், சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சந்தை மேம்பாடு, மழைநீர் வடிகால், சாலை விரிவாக்கம் உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ.32 கோடிக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அரசு நிதி ஒதுக்கி விரைவில் பணிகள் துவங்கப்படும். தற்போது இந்நகராட்சியில் ரூ 140.13 கோடியில் முடிவுற்றுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கேஎன். நேரு, கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் இன்று துவக்கி வைக்கின்றனர். இத்திட்டத்தை பொறுத்தவரை கடந்த 2010-11ம் ஆண்டு அப்போதைய திமுக அரசால் அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக பணிகள் மந்தமாக நடந்தன. நமது முதல்வர் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நீர்பிடிப்பு பகுதிகள் என தனியார் நிறுவனங்களின் குடோன் கட்டுமான பணிக்கு எதிரான சிஎம்டிஏ நடவடிக்கை தவறானது: உயர் நீதிமன்றம் உத்தரவு

வெடி விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.25லட்சம்: முத்தரசன் வலியுறுத்தல்

தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு தூக்கி எறிந்துள்ளது: விவசாயிகள்-தொழிலாளர் கட்சி குற்றச்சாட்டு