11ம் வகுப்பு பாட புத்தகத்தில் 2014-15 ஆண்டில் மவுலானா ஆசாத் குறிப்புகள் நீக்கப்பட்டன: என்சிஇஆர்டி விளக்கம்

புதுடெல்லி, ஏப். 18: 11ம் வகுப்பு ஒன்றிய பாடப்புத்தகத்தில் மவுலானா ஆசாத் குறித்த குறிப்புகள் 2014-15ம் ஆண்டில் நீக்கப்பட்டதாகவும், அதை கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என்றும் என்சிஇஆர்டி விளக்கம் தந்துள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி), 11 மற்றும் 12ம் வகுப்பு பாடபுத்தகங்களில் கடந்த ஆண்டு பல்வேறு மாற்றங்களை செய்தது. முகலாய மன்னர்கள், ஆர்எஸ்எஸ் மீதான தடை, குஜராத் கலவரம், எமர்ஜென்சி உள்ளிட்ட பல பாடக்குறிப்புகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில், 11ம் வகுப்பு என்சிஇஆர்டி பாட புத்தகத்தில் சுதந்திர போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சருமான மவுலானா ஆசாத் பற்றிய குறிப்புகள் நீக்கப்பட்டதாக சில தினங்களுக்கு தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.என்சிஇஆர்டி உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘இது குறித்து பாடப்புத்தகத்தின் முந்தைய பதிப்புகளை பார்த்த போது, 2014-15 முதல் குறிப்பிடப்பட்ட பாராவில் மவுலானா ஆசாத்தின் பெயர் இல்லை. இதுதொடர்பாக 2013ல் திருத்தம் செய்யப்பட்டு, மறுபதிப்பு 2014-15ல் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதனை தற்போதைய மாற்றத்துடன் தொடர்புபடுத்த வேண்டாம். தகவல்களை புதுப்பித்தல் அல்லது திருத்துதல் வழக்கமான நடைமுறையாகும்’’ என்றார்.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்