நெல்லை கோட்ட அஞ்சலகங்களில் ஆதார் பதிவு, திருத்தம் செய்ய சிறப்பு முகாம்கள்

நெல்லை, மே 24: நெல்லை, பாளை, அம்பை தலைமை அஞ்சலகங்கள் மற்றும் நெல்லை கோட்டத்திற்கு உட்பட்ட 48 துணை அஞ்சலங்களில் ஆதார் பதிவு மற்றும் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நெல்லை அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகங்களிலும் அத்துடன் கோட்டத்தில் இடம்பெற்ற 48 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவை சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய மற்றும் மாநில அரசின் பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டும் பொதுமக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்திலும் நெல்லை, பாளை, அம்பை தலைமை அஞ்சலகங்கள் மற்றும் நெல்லை கோட்டத்திற்கு உட்பட்ட 48 துணை அஞ்சலகங்களிலும் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவையானது வேலைநாட்களில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. இதில் புதிதாக ஆதார் பதிவு செய்வதற்கு கட்டணம் எதுவும் பெறப்படாமல் இலவசமாக செய்யப்படுகிறது. ஆதார் கார்டில் பெயர், முகவரி, மின்னஞ்சல், அலைபேசி, பிறந்த தேதி முதலியவற்றில் ஏதேனும் திருத்தம் செய்வதற்கு அல்லது மாற்றம் செய்வதற்கும், 10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் எண்களை புதுப்பிக்கவும் ரூ.50 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஆதாரில் இருக்கும் கைரேகை மற்றும் கருவிழி தகவல்களை புதுப்பிக்க ரூ.100 வீதம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. எனவே, விருப்பப்படுவோர் உரிய சான்றுகளோடு அருகில் இருக்கும் அஞ்சலகங்களை அணுகி இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்