நம் சுற்றுச்சூழலை நாமே பாதுகாப்பது மிக முக்கியம் தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் பேச்சு

கந்தர்வகோட்டை,ஜூன்6: நம் சுற்றுச்சூழலை நாமே பாதுகாப்பது மிக முக்கியமானதாகும் என்று அறிவியல் இயக்க செயலாளர் முத்துக்குமார் தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை வட்டார கிளையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிற்கு வட்டாரத் தலைவர் ரகமதுல்லா தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்க புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முத்துக்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு உலக சுற்றுச்சூழல் தினம் குறித்து பேசும்போது, உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 அன்று கடைபிடிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சூரிய குடும்பத்தில் பூமியில் மட்டுமே மக்கள் வாழ்கின்றனர். சிறப்பு மிக்க பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் சபை சார்பில் 1974 ஜூன் 5 முதல் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், கடற்கரைகள் அனைத்தும் மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாதது. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்வு சுற்றுச்சூழல் சமநிலையில் இருக்க வேண்டும்.
இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்பம் மற்றும் தொழில் சாலைகள் வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக மாசடைகிறது. ரசாயனக் கழிவுகள், புகை உள்ளிட்டவைகள் நீர்நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது. நம் சுற்றுச்சூழலை நாமே பாதுகாப்பது மிக முக்கியமாகும். மரங்கள் இல்லை என்றால் நாம் சுவாசிக்க காற்று கூட கிடைக்காது. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் வெப்பநிலை பல மடங்கு உயரும் அபாயமும் உள்ளது. எனவே காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கவேண்டும்.

அதே நேரத்தில் ஒரு பகுதியில் கடும் வறட்சி, மற்றொரு பகுதியில் கடும் வெள்ளம், சூறாவளி இயற்கை சீற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இதனால் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாகவும் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதனால் பனிப்பாறைகள் உருகி கடல்நீர்மட்டம் உயரும் ஆபத்து உள்ளது. மரம் நடுவது, காடுகள் வளர்ப்பது, மரபு சாரா ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவது, சுத்திகரிக்கப்பட்ட தொழிற்சாலை கழிவுகளை வெளியேற்றுவது, அதிக மாசுபாட்டை உண்டாக்கும் திட்டங்களை கைவிடுவது இவற்றால் தான் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் முடியும். எனவே அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது நமது ஒவ்வொருவரின் கடமை. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நவீன வளர்ச்சி என்ற பெயரில் அதிகரித்த பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு காரணமாக பூமியின் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. ‘பிளாஸ்டிக் மாசுவுக்கு தீர்வு என்பது இந்தாண்டின் மையக்கருத்து என்று கூறினார்.
வெள்ளாவிடுதி அறிவியல் இயக்க கிளை நிர்வாகிகள் கோமதி, விஜி, மகாலெட்சுமி, கெளசல்யா, ரஷியா ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதில் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்