நன்கொடை கேட்பது போல் நடித்து செல்போன் திருட்டு

பெண்ணாடம், மே 26: பெண்ணாடம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி முத்துலட்சுமி (31). இவர் பெண்ணாடம் கிழக்கு வால்பட்டறை அருகே இ- சேவை மையம் வைத்துள்ளார். நேற்று இவர் இ- சேவை மையத்தின் உள்ளே வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரு மர்ம நபர்கள், நன்கொடை கேட்க வந்தனர். அவர்கள் சென்ற பிறகு முத்துலட்சுமி தனது செல்போனை தேடினார். அப்போது சுமார் ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் விசாரித்த போது இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போனை எடுத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போல பெண்ணாடம் கடைவீதியில் உள்ள கடை ஒன்றில் மாஸ்க் அணிந்து கொண்டு வந்த ஒருவர் நன்கொடை கேட்பது போல் விண்ணப்பம் ஒன்றை காண்பித்து பணம் கேட்டுள்ளார். அதற்கு அந்த கடையின் உரிமையாளர் சுப்பிரமணியன்(84) என்பவர் பத்து ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். அதனை அந்த மர்ம நபர், தான் காண்பித்த நன்கொடை ரசீதில் எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து நன்கொடை ரசீதில் சுப்பிரமணியன் எழுதிக் கொடுத்தார். அவர் சென்ற பிறகு தனது செல்போனை தேடிய சுப்பிரமணியன் அங்கு செல்போன் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மின்னொளியில் புனித சூசையப்பர் ஆலய சப்பர பவனி கோலாகலம்

மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள பத்தாம்பட்டி நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும்

தாந்தோணிமலையில் சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு