திருத்தளிநாதர் கோயிலில் சோமவாரத்தில் 108 சங்காபிஷேகம்

திருப்புத்தூர், நவ.21: திருப்புத்தூர் ஆதிதிருத்தளிநாதர் கோயிலில் நேற்று சோமவார முதல் திங்களை முன்னிட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. குன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட கோயில்களில் மிகப் பழமையானதும் தொன்மை வாய்ந்த கோயிலுமான மேலக்கோயில் என்று அழைக்கப்படும் ஆதித்திருத்தளிநாதர் கோயிலில் கார்த்திகை மாத திங்கள், சோமவார திங்களாக கடைபிடிக்கப்பட்டு 108 சங்காபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். சோமவார திங்களை முன்னிட்டு நேற்று மாலை நெல்லில் சங்குகள் அடுக்கப்பட்டு பால், சந்தனம், குங்குமம் இடப்பட்டு ரோஜா பூக்களுடன் சுற்றிலும் நெய்தீபம் ஏற்றி சிவலிங்க வடிவத்தில் அமைக்கப்பட்டது.

பின்பு சிவாச்சாரியார்களால் சங்குகளுக்கு வில்வ இலை கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு கலசங்களுக்கு பூஜையும் யாகவேள்வி, பூர்ணாகுதி நடைபெற்று மூலவரான சிவனுக்கு பூஜையில் வைக்கப்பட்ட புனித கலசநீர், கோயில் உட்பிரகாரம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம், இளநீர், விபூதி, யாகத்தில் வைக்கப்பட்ட புனித கலசநீர் ஆகிய பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். சோமவார திங்களை முன்னிட்டு, பாஸ்கர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேள்வி மற்றும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். விழாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு நெய்விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்