தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,021 அரசு ஊழியர், போலீசார், ராணுவத்தினர் தபால் வாக்கு பதிவு

தஞ்சாவூர், ஏப். 18: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார், ராணுவத்தினர் 4,021 பேர் வாக்குகளை செலுத்தினர்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதிகளில் உள்ள 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் தபால் மூலம் வாக்களிக்க ஏதுவாக கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் அவரவர் வீடுகளுக்கே சென்று தபால் மூலம் வாக்குப் பதிவை தேர்தல் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர்.

அதன்படி தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 85 வயதுக்குட்பட்ட 1,607 முதியவர்கள் விருப்ப படிவங்கள் பெற்றதில், 1,548 பேர் தபால் மூலம் வாக்களித்தனர். அதேபோல் 839 மாற்றுத்திறனாளிகள் விருப்ப படிவங்கள் பெற்றதில் 813 பேர் வாக்களித்தனர். இதையடுத்து தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்கள், போலீசார் அஞ்சல் வாக்குப் பதிவு மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர், தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற்றது.

நேற்று முன்தினம் வரை 2,639 அரசு பணியாளர்களும் 1,328 போலீசாரும், 54 ரானுவத்தினரும் தபால் மூலம் வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் மாலை 5 மணியுடன் தபால் வாக்குப்பதிவு நிறைவடைந்ததாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்ற இருப்பதால் பள்ளிக்கரணை சதுப்புநில பகுதியை வனத்துறையிடம் வழங்க முடியாது: பசுமை தீர்ப்பாயத்தில் மாநகராட்சி அறிக்கை

பெங்களூருவில் இருந்து சென்னை வந்தவரிடம் ₹19.50 லட்சம், 114 கிராம் தங்கம் பறிமுதல்: வருமான வரித்துறை விசாரணை

பராமரிப்பு பணி காரணமாக புரசைவாக்கம் கழிவு நீரிறைக்கும் நிலையம் இன்று செயல்படாது: குடிநீர் வாரியம் தகவல்