சனீஸ்வர பகவான் கோயிலில் குவிந்த பக்தர்கள்

காரைக்கால், ஏப். 30: நவக்கிரகங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவது சனி கிரகம் ஆகும். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் சன்னிதானம் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சனிக்கிழமையான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை பக்தர்கள் நலன் தீர்த்தத்தில் புனித நீராடி, பின்னர் நலன் விநாயகரை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர் தர்பாரண்யேஸ்வரரை தரிசனம் செய்து, பின்னர் சனி பகவானை பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.

சனிக்கிழமைகளில் வழக்கமாக கோயில் ஐந்து மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில் நேற்று அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்ததால் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அதிகாலை முதல் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் நடைபெற்றது. சனீஸ்வர பகவானின் தீர்த்தக் குளமான நளன் தீர்த்தத்தில் அதிகாலை முதல் பொதுமக்கள் வெயிலை பொருட்படுத்தாமல் புனித நீராடி, கோயிலில் எள் தீபம் ஏற்றி தங்கள் தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் திருநள்ளாறு பகுதியில் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related posts

தோல்வி பயத்தால் கிணற்றில் குதித்த மாணவன் மீட்பு

493 மதிப்பெண் பெற்று அன்பில் அரசு மாணவி அசத்தல்

விளையாட்டு விடுதிக்கு மாணவர்கள் தேர்வு