கலைஞர் மகளிர் உரிமை திட்டம் நாளை தொடக்கம்

சேலம், செப். 14: சேலம், இடைப்பாடியில் நாளை நடக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடக்க விழாவில், அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு பெண்களுக்கான ஏடிஎம் கார்டுகளை வழங்குகிறார்.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹1,000 உரிமைத்தொகை வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான நாளை தொடங்கப்படுகிறது. இத்திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஒரு கோடியே 6 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை ெபாறுத்தவரை 1,541 ரேசன் கடைகளில், 11.01 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இத்திட்டத்திற்காக இரு கட்டங்களாக முகாம் நடத்தி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதன்படி மாவட்டம் முழுவதும் 7.61 லட்சம் பேர் (69.15%) விண்ணப்பித்துள்ளனர். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ரேண்டம் அடிப்படையில் விண்ணப்பங்கள் எடுக்கப்பட்டு, வீடு, வீடாக சென்று விவரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது. தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல்படி தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி முதல், அவர்களின் வங்கி கணக்குகளில் உரிமைத்தொகை வரவு வைக்கப்படும்.

இதனையடுத்து திட்டத்திற்கான தொடக்க விழா சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த குரும்பப்பட்டியிலும், சேலம் வின்சென்டில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்திலும் நாளை நடக்கிறது. இதில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு, உரிமைத்தொகை பெறும் குடும்ப தலைவிகளுக்கு அதற்கான ஏடிஎம் கார்டுகளை வழங்கி பேசுகிறார். இந்த இருவிழாக்களிலும் வைத்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு கார்டுகள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அரசுத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்