இளைஞர்கள் தொழில் துவங்க ₹1.50 கோடி மானிய கடனுதவி

தர்மபுரி, மே 26: தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்களை தொழிலதிபர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ், ₹1.50 கோடி வரை மானிய கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்ட தொழில்மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு முகாம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகைவாசன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், கலெக்டர் சாந்தி பேசியதாவது: தமிழக அரசின் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கான சிறப்பு திட்டமாகும். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தொழில்முனைவோர்களாக உருவாக இத்திட்டம் பெறும் பயனுள்ளதாக அமையும். இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் பகுதிகளில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மொத்த திட்டத் தொகையில் 35 சதவீதம்(அதிகபட்சமாக ₹1.50 கோடி வரை) மானியத் தொகையாக வழங்கப்படும். சொந்த நிதியில் இல்லாமல் வங்கிக் கடன் பெற விரும்பினால், மீதமுள்ள 65 சதவீதம் வங்கிக் கடனாகப் பெற உரிய ஆலோசனைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.புதிதாக தொழில் தொடங்குவோர் மட்டுமல்லாது, ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் நிறுவனங்களை விரிவுபடுத்தவும், தொழில் ரீதியாக மேம்படுத்தவும் மானிய உதவி பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, விண்ணப்பதாரர்களுக்கு கல்வித் தகுதி தேவையில்லை. வயது 18 முதல் 55 வயது வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்தினை www.msmseonline.tn.gov.in/aabcs என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

இதற்காக மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட தொழில்மைய மேலாளர் வாசுகி, சீட்ஸ் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுகிசிவம், ஒருங்கிணைப்பாளர் மாயக்கண்ணன், வெங்கடேஷ்பாபு, சரவணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன், தாட்கோ மாவட்ட மேலாளர் சிட்டிபாபு, பிஆர்ஓ லோகநாதன், சேலம் ஜோதிஸ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள், தொழில் கூட்டமைப்புகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related posts

பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா

முதல்வரின் 3 ஆண்டுகால ஆட்சியில் முத்தான திட்டங்கள்; காலை உணவு திட்டம் பேருதவியாக உள்ளது: குழந்தைகளின் பெற்றோர் பெருமிதம்

அதிக லாபம் ஆசை காட்டி பெண்ணிடம் ₹6.56 லட்சம் மோசடி