மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை அதிமுகதான் காரணம்: பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டாமா? எடப்பாடி காமெடி

சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட இடைப்பாடி சட்டமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வீரப்பம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசியதாவது: தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ளது. வெளி மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறேன். எங்கே சென்றாலும் எடப்பாடி பழனிசாமி என 99 சதவீதம் பேரால் அழைக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் எடப்பாடி என எழுதப்பட்டுள்ளது. இந்த பெருமை எடப்பாடிக்கு சேரும். குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய், பலமுறை சட்டமன்றத்தில் பேசி 27 மாதங்கள் கழித்து தான் இந்த திட்டத்தை நிறைவேற்றினார்கள். இந்த திட்டம் நிறைவேறுவதற்கு அதிமுகதான் காரணம். ரூ.1000 ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது. எதற்கும் பயப்பட வேண்டாம், நான் இருக்கிறேன். தமிழகம் முழுவதும் குடும்பத் தலைவிகள் பயப்பட வேண்டாம். அதிமுக ஆட்சி இருந்திருந்தாலும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

* கடை கடையாக பிரசாரம்
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் விக்னேசை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலம் சின்னகடைவீதியில் நடந்து சென்று பிரசாரம் செய்தார். அப்போது அங்குள்ள சாலையோர வியாபாரிகளிடம் அதிமுக தேர்தல் அறிக்கை நோட்டீஸ் கொடுத்தார். பின்னர் அங்குள்ள கொத்தமல்லி விற்கும் பெண் வியாபாரியிடம், கொத்தமல்லி எத்தனை நாட்களுக்கு கெடாமல் இருக்கும் என்று கேட்டார். அதற்கு அந்த வியாபாரி, இரண்டு நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம் என்று தெரிவித்தார். குடை மிளகாயை வாங்கி இது காரமாக இருக்குமா என்று கேட்டார். அதற்கு வியாபாரி காரம் இருக்காது என்று கூறினார். இதேபோல் ஒவ்வொரு வியாபாரிகளிடம் எடப்பாடி பழனிசாமி காய்கறிகளின் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

 

Related posts

கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சுற்றுலா வாகனம் ஆற்றில் கவிழ்ந்ததில் உயிரிழந்தோருக்கு குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு காரணம் முதலமைச்சர் ஸ்டாலின்: திருமாவளவன் பேச்சு