பெண்களின் பிரச்னைகளை அணுக மகளிர் காவல் அதிகாரிகளுக்கு உளவியல் பயிற்சி: டிஜிபி சைலேந்திரபாபு தகவல்

சென்னை: மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு, பெண்கள் பிரச்னைகளை அணுக உளவியல் பூர்வமாக பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். சென்னை அடுத்த பட்டாபிராமில் அனைத்து மகளிர் காவல் நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆவடி காவல் ஆணையர் அருண் தலைமை வகித்தார். இதில் டிஜிபி சைலேந்திரபாபு திறந்து வைத்து பேசியதாவது: தமிழ்நாட்டில் புதிதாக ஒவ்வொரு உட்கோட்டத்துக்கும் ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தற்போது புதிதாக 20 மகளிர் காவல் நிலையம் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் இதுவரை 45,000 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதற்காக, அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகளுக்கு உளவியல்பூர்வமாக பெண்கள் பிரச்னைகளை அணுகுவதற்காக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பெங்களூருவில் உள்ள அகில இந்திய மனநல மருத்துவமனையில் நாளை முதல்கட்டமாக பெண்களுக்கான பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும் என கவனமாக கேட்டு, அவர்களின் பிரச்னைகளை சரிசெய்ய 120 மகளிர் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் மூலம் அறிவியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் விசாரணையின் தரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார். இந்த புதிய காவல் நிலையத்தில் திருநின்றவூர், பட்டாபிராம், முத்தாபுதுப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படும்.

Related posts

மயிலாடுதுறையில் சுகாதார அதிகாரிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது

செல்லப் பிராணிகள் பராமரிப்பு மையங்களுக்கு என தனி விதிமுறைகளை வகுக்கக்கோரிய மனு: அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைசி சுற்றுக்கு முன் தபால் வாக்கு விவரங்கள் வெளியிடப்படும்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்