பெண்கள் வெளிப்படையாக பேசினால்தான் மருத்துவ வசதிகள் அதிகரிக்கும்! : காரணங்களுடன் விளக்குகிறார் மருத்துவர்

வலி என்பது ஒரு பொதுவான அனுபவமாக இருப்பினும் அதன் வீரியமும், வலியின் தீவிரமும், பெண்களில் மட்டும் மாறுபட்ட உணர்வுகளை உண்டாக்கும். உதாரணத்திற்கு தலைவலி எல்லோருக்கும் பொது, ஆண்களுக்கு அதன் வீரியம் என்னவோ அப்படித்தான் அதன் வலி இருக்கும். ஆனால் பெண்களில் ஒரு முறை வரும் வலியின் தீவிர, அடுத்த முறை வேறு விதமாகவும், அல்லது அதன் தாக்கம் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருப்பதைக் காணலாம். மேலும் மாதவிடாய்க் காலப் பிரச்னைகளை எடுத்துக்கொண்டால் கூட ஒரு முறை உண்டான மாதவிடாய் கால மனநிலை மாற்றங்கள், வலிகள் எல்லாம் மாதம் ஒருமுறை வேறுபட்டுக்கொண்டேயிருக்கும். என்ன காரணம் பெண்களில் மட்டும் இந்த வலிகளுக்கான உணர்வுகள் ஒரே நிலையில் இல்லாமல் மாற்றம் பெறுவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகளை விவரமாக விளக்குகிறார் டாக்டர் கார்த்திக் பாபு நடராஜன் (MBBS,MD, DNB, வலி ​​மேலாண்மை) இதை வலிகள் மேலாண்மை எனக் கூறுவோம்(Pain Management). பெண்களில் வலிகள் வேறுபட நிறைய காரணிகள் உண்டு.

உயிரியல் காரணிகள்

பெண்களுக்கு வலி மேலாண்மை வேறுபட்டிருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மாதவிடாய்ச் சுழற்சி முழுவதும் ஏற்படும் உயிரியல் மாற்றங்கள். அதாவது ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் வலி உணர்திறன் மற்றும் உணர்வை பாதிக்கலாம். உதாரணமாக, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் வலி வரம்புகளில் மாற்றங்களை உண்டாக்கும், பல பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியில் வரும் பொதுவான வலிகள் அதி தீவிரமாக இருப்பதாகக் தெரிவித்துள்ளனர். கூடுதலாக, எண்டோமெட்ரியோசிஸ், ஃபைப்ரோமியால்ஜியா மற்றும் ஒற்றைத் தலைவலி போன்ற நிலைமைகள் பெண்களில் அதிகம் காணப்படுகின்றன, மேலும் வலியுடன் சோர்வு, சக்தி இழப்பு போன்றவையும் உடன் சேர்வதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆண்களிலிருந்து பெண்களின் உடற்கூறு முற்றிலும் வேறுபட்டது, இடுப்புக் கட்டமைப்புகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் போன்றவையும் தனிப்பட்ட வலி அனுபவங்களுக்கு வழிவகுக்கும். கருத்தரிப்பு, பிரசவம் மற்றும் பிரசவத்திற்குப் பின் உண்டாகும் மாற்றங்கள் ஆகியவையும் கூட வலிகளில் மாற்றங்களை உண்டாக்கலாம்.

உளவியல் காரணிகள்

பெண்கள் வலியை எப்படி உணர்ந்து சமாளிக்கிறார்கள் என்பதிலும் உளவியல் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் பாலினப் பாத்திரங்கள் பெண்களின் வலியைக் குறைத்துக்கொள்ள அல்லது மற்றவர்களின் தேவைகளை தங்கள் தேவைகளைவிட அதிகம் முன்னுரிமை கொடுப்பது, போன்றவையும் கூட காரணமாக அமையலாம். இதனால் பெரும்பாலான பெண்கள் வலிகளின் தீவிரத்தை இரண்டாம் பட்சமாகக் கொண்டு கடைசி நேரத்தில் அல்லது நாள்பட்ட நிலையில் மருத்துவரை அணுகும் தறுவாயில் அவை உயிருக்கே ஆபத்தை உண்டாக்கலாம். பெண்களின் அடிப்படையிலேயே இந்த சகிப்புத் தன்மை என்னும் நிலை அதிகம் இருப்பதாலேயே பல பெண்களும் தன் உடலில் இருக்கும் சிறு சிறு வலிகள் அது எதனால் உண்டாகின்றன என சிந்தித்து உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை. மேலும், அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம், கடந்த கால அனுபவங்கள் இவைகளும் வலி உணர்திறன் மற்றும் அதன் தாக்கத்தை சமாளிக்கும் வழிமுறைகளை பெண்களில் அதிகரித்திருப்பதும் ஒரு காரணம்.

சமூக கலாச்சார காரணிகள்

உடலின் ஆரோக்கியத்தில் தடை உண்டாகும் தறுவாயில் அவை வலியாகத்தான் நமக்கு அறிகுறிகளைக் காட்டும். ஆனால் பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களும் சமூக கலாச்சார காரணிகளும் இந்த வலி எல்லாம் ஒரு பொருட்டல்ல என்னும் நிலைக்குத் தள்ளிவிடுகின்றன. உதாரணத்திற்கு தன் தாயின் வீட்டில் மாதவிடாய் காலத்தில் முழு நேர ஓய்விலோ அல்லது வலியால் வீட்டில் எங்கேயாவது உழன்று கொண்டோ கிடக்கும் சில பெண்கள், திருமணத்திற்குப் பின் தன் வலிகளைக் கூட சொல்ல முடியாத அளவிற்கு கணவன் வீட்டில் அமைதியாகி விடுகிறார்கள். காரணம் வீட்டின் பொறுப்புகள், கடமைகள், கணவன் வீட்டார் என்ன சொல்வார்களோ, அல்லது சிறிது நேரம் ஓய்வெடுத்தாலும் வீட்டாரின் தேவைகள் என்ன ஆவது என்னும் எண்ணமே மேலோங்கி நிற்க அவர்களின் வலிகள் இரண்டாம் பட்சமாக மாறிவிடுகின்றன. இதனாலேயே மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் ஆண் உடல் பாகங்களிலும், அவர்களை முதன்மையாகக் கொண்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. காரணம் எந்த அளவிற்கு தேவையும், சிகிச்சையும் தேவைப்படுகிறதோ அந்த அளவிற்கு மருத்துவ வசதிகளும் பெருகும். குறிப்பாக இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் மருத்துவ சிகிச்சைகளில் பெண்கள் தங்களது உடல் பாகங்களைக் காட்டி சிகிச்சைப் பெறுவதிலும் தயக்கம் நிலவுவதும் இதற்கு மிகப்பெரிய காரணம். இதனாலேயே இப்போது இருக்கும் பெரும்பாலான சிகிச்சைகள் ஆணின் உடலியலை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. இதில் சமூகப் பொருளாதார நிலை, இனம் மற்றும் கலாச்சார பின்னணி ஆகியவை பாலின வேறுபாட்டுடன் குறுக்கிட்டு வலிகளைக் கூட உடலின் எந்தப் பாகத்தில் உள்ளது என்பதைப் பொருத்துதான் மருத்துவர் தேர்வும் நிகழ்கிறது. உதாரணத்திற்கு மார்பகத்தில் கட்டியோ அல்லது வலியோ தென்பட்டால் முதலில் பெண்கள் அல்லது பெண் குடும்பத்தார் தேடுவது பெண் மருத்துவரைத்தான் பிறகுதான் சிகிச்சைகள். பெண் மருத்துவர்கள் எல்லா நேரத்தில் எல்லா பகுதிகளிலும் கிடைப்பதும் அரிது என்பதால் சிகிச்சைக்கான காலம் கடந்து தவிக்கின்றனர்.

வேறுபாடுகளை நிவர்த்தி செய்தல்

பெண்களுக்கான வலி நிர்வாகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய, மாடர்ன் அணுகுமுறை தேவை. பெண்களின் வலிகளைப் புரிந்துகொள்ள உயிரியல், உளவியல் மற்றும் சமூக கலாச்சார காரணிகளின் தீவிரம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். குறிப்பாக பாலின-உணர்திறன் பாதுகாப்பு குறித்த கல்வி மற்றும் பயிற்சியை சுகாதார பணியாளர்கள் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக, ஆராய்ச்சி முயற்சிகள் பெண்களின் வலியைப் படிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் பல்வேறு மக்கள்தொகை குழுக்களில் கண்டுபிடிப்புகள் பெண் குழுக்களுடம் பொருந்துகின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெண்களின் வலியைப் பற்றி வாதிடுவதற்கு அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதும் மிக முக்கியமானது. நோயாளிகள் மற்றும் மருத்துவர்களிடையே வெளிப்படையான தொடர்பை ஊக்குவித்தல், பெண்களின் வலியின் தீவிரம் உணர்ந்து தன்னிச்சையாக முடிவெடுக்கும் நிலையும் அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு தங்களின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்வதன் அவசியத்தை எடுத்துரைத்து விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். அந்தரங்க வலிகள், ஆரோக்கியம் குறித்து வெளிப்படையாக பேசி, அதற்கான சிகிச்சை எடுக்க பெண்கள் முன்வந்தால் மட்டுமே சிகிச்சை வசதிகள் அதிகரிக்கும். எதையும் விட உயிர் மேலானாது என்னும் எண்ணம் மேலோங்கினால்தான் மற்றவை நீர்த்து மருத்துவ சிகிச்சை முறைகளும் பெண்களுக்கென பிரத்யேகமாக அதிகரிக்கும். இல்லையேல் எல்லா சிகிச்சை முறைகளும் ஆணுக்கு என்னவோ அதேதான் பெண்களுக்கும் என நீடிக்கும். இதற்கு நல்ல எடுத்துக்காட்டு மகப்பேறு மருத்துவத்தைச் சொல்லலாம். ஆண்களில் மகப்பேறு என்ற ஒன்றே இல்லாத காரணம்தான் அதைக்குறித்து பெண்கள் பேசியே தீர வேண்டும் என்ற நிலை உருவானது. விளைவு இன்று உலக அளவில் மகப்பேறு மருத்துவத்தில் மட்டும் தினம் தினம் நவீனத்துவம் பெற்று முன்னேற்றம் அடைந்துகொண்டே இருக்கின்றன. இப்படி அத்தனைப் பிரச்னைகளுக்கும் வெளிப்படைத் தன்மைதான் ஒரே தீர்வு.

சமநிலை தேவை

ஆண் – பெண் சமநிலை என்பது எதில் வர வேண்டுமோ இல்லையோ நிச்சயம் மருத்துவத் துறையில் வந்தே தீர வேண்டும். காரணம் பெண்கள் தங்களின் வலிகள், பிரச்னைகள் குறித்து அதிகம் வெளிப்படையாகச் சொல்லும் போதுதான் அதற்காக ஆய்வுகள் , கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும். ஆணுக்குக் கொடுக்கும் ஒரு மருந்து பெண்ணுக்கு என்ன விகிதத்தில் கொடுத்தால் நோய் குணமாகும் என்னும் முழுமையான மருத்துவத் தீர்வுகள் கிடைக்கும். ஆண் – பெண் பேதம், அந்தரங்கம் என தேவையற்ற தயக்கங்கள் கலைந்தால்தான் மருத்துவத் துறையில் பெண்களுக்கென தனித்துவமான மருத்துவ சிகிச்சைகள் அதிகரிக்கும். உதாரணத்திற்கு முகத்தில் பயன்படுத்தப்படும் சரும க்ரீமிற்கே ஆண், பெண் வேறுபாடு இருக்கும் போது எத்தனையோ உடல் பிரச்னைகள் உள்ளன, அவற்றிற்கெல்லாம் ஆண்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளே பெண்களுக்குப் பயன்படுத்தினால் சரியாகுமா. நிச்சயம் பக்கவிளைவுகள்தான் அதிகரிக்கும்.
– ஜாய்

Related posts

3 நாட்களில் 3 தீவிரவாத தாக்குதல்: 6 ராணுவ வீரர்கள் படுகாயம் ஒரு தீவிரவாதி பலி.! ‘காஷ்மீர் டைகர்’ என்ற அமைப்பு பொறுப்பேற்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கல்வி, தசைப்பயிற்சி: பயன்படுத்திக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தல்

குவைத் தீ விபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு