வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் தெரிவித்தால் 48 மணி நேரத்தில் உணவகம் மீது நடவடிக்கை: உணவு பாதுகாப்பு அதிகாரி அனுராதா பேட்டி

தாம்பரம்: கிழக்கு தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் பூண்டி பஜார் சிக்னல் அருகேயுள்ள உணவகங்களில் நேற்று இரவு உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் அனுராதா தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதுகுறித்து அனுராதா கூறியதாவது:கடந்த 2 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 130 உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுபோல் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம் பகுதியில் அதிகாரிகளுடன் 6 உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 2 கடைகளில் சுத்தம், சுகாதாரமின்றி மிகவும் மோசமான நிலையில் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. ஒரு கடையில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது. சுத்தம், சுகாதாரமின்றி செயல்பட்ட ஒரு கடையை மூடினோம். உரிமம் இல்லாமல் இயங்கிய கடையில் விற்பனை செய்ய தடை விதித்தோம். பிரிட்ஜில் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த அசைவ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கெட்டுபோன உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு சமைத்து கொடுப்பதால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 16 மாதிரிகளை சோதனைக்காக ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பியுள்ளோம். அதில் நுண்ணுயிர் கிருமிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்.

உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்கள், உணவகம் சுத்தம், சுகாதாரமாக உள்ளதா, உணவுகளை சுகாதாரமாகவும், பாதுகாப்பாகவும் தயாரிக்கிறார்களா, உணவு பாதுகாப்புத்துறை உரிமம் உள்ளதா என பார்க்கவேண்டும். பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம். மேலும் 94442 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் செய்தால், 48 நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உணவகங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரயில் சேவை

உதகை – குன்னூர் 23 கி.மீ புறவழிச்சாலையின் பணி 80% நிறைவு: புறவழிச்சாலை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தகவல்

சதுரகிரிக்கு செல்ல 4 நாட்களுக்கு அனுமதி