வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.19 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் செய்துள்ளேன்: திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி பிரசாரம்

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அப்போது அவர் பேசியதாவது:
வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், திருவிக நகர், கொளத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில், கடந்த 5 ஆண்டுகளில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் வடசென்னை தொகுதியில் உள்ள தொழிற்சாலை மற்றும் பெரு நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதி, சென்னை மாநகராட்சி நிதி ஆகியவற்றின் மூலம் பல்வேறு திட்டங்களை செய்துள்ளேன்.

குறிப்பாக, பேருந்து நிழற்குடை, சமுதாய நலக்கூடங்கள், அங்கன்வாடி மையம், மாநகராட்சி பள்ளிக்கு தேவையான மேஜை, நாற்காலி, ரேஷன் கடைகள், பல்நோக்கு கட்டிடங்கள், மாநகராட்சி பள்ளியில் புதிதாக வகுப்பறைகள், பூங்காக்கள் நவீனப்படுத்துதல், உடற்பயிற்சி கூடங்கள், ரயில்வே சுரங்கப்பாதை, ரயில்வே மேம்பாலங்கள், நூலகங்கள் என பல்வேறு திட்ட பணிகளை ₹19 கோடி மதிப்பீட்டில் செய்துள்ளேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். உதாரணமாக காலை சிற்றுண்டி திட்டம், மகளிர்கள் இலவச பேருந்து திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

வெள்ளம் பாதிக்கப்பட்டபோது வடசென்னை பகுதி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினேன், வெற்றி பெற்று வட சென்னை பகுதியில் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பு பள்ளி கட்டிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து கொடுப்பேன். திருவெற்றியூர் தொகுதியில் மீனவர்களின் முக்கிய பிரசினையான ₹148 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தேன்.

இதே போல் பெரம்பூர் தொகுதியில் உள்ள கொடுங்கையூர் குப்பை கொட்டு வளாகத்தினால் அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர். அதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கூறி ₹640 கோடி மதிப்பீட்டில் பயோ மைனிங் முறையை தமிழக முதல்வர் கொண்டு வந்தார் இதற்கு முக்கிய பங்கு வகித்தேன். எனவே என்னை வெற்றி பெற செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Related posts

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால், ஆம்ஆத்மி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!

கொடைக்கானலுக்குச் செல்ல உள்ளூர் மக்களும் ஒரு முறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு