பொங்கல் பண்டிகையின் 5ஆம் நாளான இன்று கடலூரில் களைகட்டிய ஆற்றுத்திருவிழா: சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது


கடலூர்: பொங்கல் பண்டிகையின் 5ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து நதிகளிலும் கங்கை நீர் கலப்பதாக ஐதீகம். இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். கடலூர் தென்பெண்ணையாற்றில் இன்று ஆற்று திருவிழா கொண்டாடப்பட்டது. இதனால் கடலூர், மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தின்பண்ட கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் கடைகள், பிளாஸ்டிக் கடைகள், ராட்டினங்கள் குறிப்பாக ஆற்றுத்திருவிழாவில் மட்டுமே விற்கப்படும் சுருளிக்கிழங்கு கடைகளும் வைக்கப்பட்டிருந்தன. வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சாமிகள், அலங்கரிக்கப்பட்டு, வாகனங்களில் மேளதாளம் முழங்க மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றுக்கு கொண்டு வரப்பட்டன.

அங்கு ஆற்றில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபட்டனர். இதே போல கடலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள தென்பெண்ணை ஆற்றில் கடலூர் பாடலீஸ்வரர் சாமிக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. இங்கு ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் தென்பெண்ணையாற்றின் கரையில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி கொண்டே இருந்தனர்.

மேலும், கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த ஆற்று திருவிழாவுக்கு வந்ததால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர்.

Related posts

ஆந்திரா தேர்தல் வன்முறையில் போலீசாரின் செயல்பாடுகள் என்ன?: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

உபியில் பாஜவுக்கு 8 ஓட்டு போட்ட 16 வயது சிறுவன்: வீடியோ எடுத்து அவரே வெளியிட்டதால் சிக்கினான்

இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்