நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியையொட்டி நடை பயிற்சி பாதைகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சியையொட்டி, பொது சுகாதார துறை சார்பில் நடைபயிற்சி செல்லும் வழித்தடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டத்தின்படி 8 கிமீ தூரத்துக்கு நடைப்பயிற்சி இருக்கும் வகையில் நடைப்பயிற்சி திட்டத்தை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் கடந்த நவ. 4ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்திலும் சிறப்பாக செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தினமும் 8 கிமீ தூரம் அல்லது 10 ஆயிரம் அடி தூரம் நடக்க வேண்டும் என்பதை ‘நடப்போம் நலம் பெறுவோம்’ என்பதன் அடிப்படை நோக்கமாகும்.

இந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதார துறை சார்பில், நடப்போம் நலம் பெறுவோம் நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி நடைபயிற்சி மேற்கொள்ளும் வழித்தடங்களில் தாகம் தீர்க்கும் தண்ணீர் வசதி, அமர்வதற்கான வசதி, மற்றும் பசுமை பேணிக்காக்கும் வகையில் மர கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதார துறை துணை இயக்குநர் பிரியாராஜ் தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார். இதில், மலேரியோ அலுவலர் மணி வர்மா, காஞ்சிபுரம் மாநகராட்சி நகர் நல அலுவலர் அருள் நம்பி, மருந்தாளுனர் பழனிவேலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த நடைபயிற்சி நடைபெறும் வழித்தடங்களாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து திருப்பருத்திக்குன்றம் – கீழ்கதிர்பூர் சாலை மார்க்கமாக கீழ்கதிர்பூர் கூட்டுசாலை வரை சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிறைவடைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்