விஐடியில் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி; பயணிகள் விமானங்களை தயாரிக்கும் தொழில்நுட்ப பாடத்திட்டம் அவசியம்: சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பேச்சு

திருவள்ளூர்: இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், பயணிகள் விமானம் தயாரிக்கும் தொழில்நுட்ப பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும், என்று விஐடியில் மாணவர்களுடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் மோகனகுமார் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கடந்த 1ம் தேதி மாலை சந்திரயான்-3 விண்கலம் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சந்திரயான்-3 திட்ட இயக்குநர் மோகனகுமார் கலந்துகொண்டு மாணவர்களுடன் பேசியதாவது:

சந்திரயான்-3 பணியின் வரலாற்று வெற்றியை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் சந்திரயான்-3ல் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாகத்தான் செலவு குறைந்தது. இதற்கான அனைத்து தொழில்நுட்பங்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது. குறிப்பாக சந்திரயான்-3 கருவிகள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் அதற்கான உதிரி பாகங்கள் தயாரித்தவர்கள் தான். காரணம் சந்திரயான்-3க்கு தேவையான உதிரி பாகங்களை குறிப்பிட்ட நேரத்தில் தயார் செய்து வழங்கியதால் தான், சந்திரயான்-3 குறிப்பிட்ட நேரத்தில் வெற்றிகரமாக இயக்கப்பட்டது. தற்போது இந்தியாவில் பயணிகள் விமானங்கள்

தயாரிக்க போதிய ஆராய்ச்சிகள் இல்லை. அதன் காரணமாகத்தான் அதற்கான மூலப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. ரயில் மற்றும் வாகன போக்குவரத்து தவிர விமான விபத்துகளின் சதவீதம் குறைவாகவே உள்ளது. அதனால் தான் பயணிகள் விமானம் உள்நாட்டிலேயே தயாரிக்க, தேவையான பாடத்திட்டங்களை இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொண்டு வர வேண்டும்.

பல்வேறு துறைகள் இதில் இணைந்திருப்பதால் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களும் விமான உதிரி பாகங்கள் தயாரிப்பில் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். சந்திரயான்-3, ஹார்பிட்டர் லேண்ட், ரோபோட் என மூன்று பகுதிகள் உள்ளது. இதில் லேண்டர், ரோவர் ஆகியவை பேட்டரியால் இயங்கக் கூடியது. அந்த பேட்டரி 14 நாட்கள் மட்டுமே இயங்கக் கூடியது. 14 நாட்கள் மட்டுமே நிலவின் தென் பகுதியில் சூரிய ஒளி காணப்படும். தற்போதுள்ள தொழில்நுட்பத்தில் 14 நாட்கள் மட்டுமே இயங்கக்கூடிய பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தொழில்நுட்பம் மட்டுமே தற்போது இஸ்ரோவிடம் உள்ளது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் தற்போது இல்லை. அதற்கான முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் சேட்டிலைட் எந்த எடை அளவு செல்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து, அந்த எடை அளவிற்கு ஆராய்ச்சியாளர்களை அனுப்பலாமா என்று ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிகளுக்கு கூட இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்த ஒன்றிய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

மக்களவைத் தேர்தல்: 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது