விசிக பிரசாரத்தில் தொண்டர்கள் மோதல் போலீஸ் தடியடி

கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டான் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தார். அப்போது, அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலம்பாடி, குமுடிமூலை, நத்தமேடு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிகம் இருந்தனர். இவர்களில் சிலர், ‘திருமாவளவன் தங்கள் ஊருக்கு வாக்கு சேகரிக்க வர வேண்டும்’ என கூறி கோரிக்கை வைத்தனர். ஆனால் பிரசார வாகனம் திட்டமிட்ட பயணத்தின்படி தான் செல்லும் என கூறப்பட்டது. அப்போது திருமாவளவன், ‘நான் வேறு ஒரு நாள் வருகிறேன். தற்போது வேறு ஊருக்கு செல்ல வேண்டும். வழி விடுங்கள்’ என கூறினார். இதைதொடர்ந்து வாகனம் புறப்பட தயாரானது.

அப்போது, சில தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் திருமாவளவனின் பிரசார வாகனத்தின் முன் தரையில் படுத்து உருண்டு தங்கள் ஊருக்கு வர வேண்டும் என்றனர். இதனால் கட்சியின் தொண்டர்களுக்கிடையே வாக்குவாதம் மற்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவர்களை லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். தொடர்ந்து திருமாவளவனின் பிரசார வாகனம் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றது.

Related posts

சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!!

ஜூன்- 01: இன்று பெட்ரோல் ரூ.100.75, டீசல் ரூ.92.34 க்கு விற்பனை!.

மாதவரம் அருகே கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை; 90 பாட்டில்கள் பறிமுதல்