விருதுநகர் அருகே காட்டு முயல்கள் வேட்டை வாலிபர்களுக்கு அபராதம்

திருவில்லிபுத்தூர் : விருதுநகர் அருகே காட்டு முயல்களை வேட்டையாடிய 3 பேரை பிடித்து வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.விருதுநகரை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனப்பாதுகாவலர் செசில் கில்பர்ட் உத்தரவின்படி ரேஞ்சர் கார்த்திகேயன் தலைமையில் வனவர் செந்தில், ராகவன் மற்றும் வன பாதுகாப்புப் படையினர் பி.குமாரலிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் 7 காட்டு முயல்களை வேட்டையாடி வைத்திருந்தது தெரியவந்தது. அதில் 6 முயல்கள் உயிருடனும், ஒரு முயல் இறந்த நிலையிலும் இருந்தன. மேலும் இருசக்கர வாகனம், நெற்றி லைட், வேட்டைக்கு பயன்படுத்தும் பிடிவலைகள் ஆகியவற்றையும் வைத்திருந்தனர்.

அவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினர், விருதுநகர் வனப்பாதுகாப்புப் படை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் விருதுநகர் அருகே பி.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த நாகப்பன்(40), ஆனைக்குட்டம் கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(34), பாலமுருகன்(27) என தெரியவந்தது.பின்னர் மூவரையும் திருவில்லிபுத்தூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் பிடிபட்ட 3 வாலிபர்களுக்கும் அபராதம் விதித்தனர்.

Related posts

பெண் போலீசாருக்கு தேவையான வசதிகள் செய்வதில் தமிழ்நாடு காவல்துறை முன்னிலையில் உள்ளது: டிஜிபி சங்கர்ஜிவால் பெருமிதம்

ஒரு கி.மீ. தூரத்தில் வீடு இருந்தாலும் பள்ளியில் காலியிடம் உள்ளதால் மாணவிகளை சேர்க்க வேண்டும்; கட்டாய கல்வி சேர்க்கை வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

2024-25 நிதியாண்டில் தேசிய ஓய்வூதிய அமைப்பின் முதலீட்டு சந்தை மதிப்பு இலக்கு ரூ.15 லட்சம் கோடியாக நிர்ணயம்: ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று ஆணையம் தகவல்