ஆக்கிரமிப்புகளால் திணறும் விருதுநகர் மெயின்பஜார்

*ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல்

விருதுநகர் : விருதுநகரில் மெயின்பஜார், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளால் அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் ஆட்டோ செல்ல முடியாமல் உயிரிழப்பு ஏற்படும் சூழல் அதிகரித்து வருகிறது.விருதுநகரில் மெயின்பஜார், ரயில்வே பீடர் ரோடு, வடக்கு ரத வீதி, தேசபந்து மைதானம், பழைய பஸ் நிலைய வெளிப்பகுதி, புல்லலக்கோட்டை ரோடு, புளுகானுரணி ரோடு, மதுரை ரோடு, பழைய அருப்புக்கோட்டை ரோடு, மல்லாங்கிணர் ரோடு, சிவகாசி ரோடு என அனைத்து சாலைகளும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி விட்டன. நகரில் ஆக்கிரமிப்பில் உள்ள சாலைகள் அனைத்தும் 60 முதல் 40 அடி அகலமுடையவை. தற்போது 10 முதல் 15 அகலத்தில் காட்சி தருகின்றன.

40 முதல் 30 அடி அகலம் உடைய மெயின்பஜார் தற்போது 10 முதல் 15 அடி அகலத்தில் காட்சி தருகிறது. மெயின்பஜார் வழியாக அரசு பஸ்கள் இயக்கப்பட்ட போது ஆக்கிரமிப்பு குறைவாக இருந்தது. கடந்த ஒன்னறை ஆண்டுகளுக்கு முன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.இதனால் இருபுறமும் உள்ள கடைகளுக்கு வருவோர் இஷ்டத்திற்கு இருபுறமும் வாகனங்களை நிறுத்தி செல்வதால் காலை, மாலை நேரங்களில் 8 அடி அகலம் கூட இருப்பதில்லை. காய்கறி மார்க்கெட் பகுதி ஒன்றையடி பாதையாக காட்சி தருகிறது. அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அமைப்பில் உள்ளன.

இந்நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு மெயின்பஜாரில் பூஜை பொருட்கள், காய்கறி, பலசரக்கு வாங்க மக்கள் குவிந்தால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போக்குரவத்து நெரிசலை கட்டுப்படுத்த நகரில் எந்த இடத்திலும் போலீசார் நிறுத்தப்படுவதில்லை.கடந்த 5 ஆண்டுகளாக விருதுநகரில் போலீசார் ஹெல்மெட் வசூலில் மட்டும் கவனம் செலுத்துகின்றனர். போக்குவரத்தை முறைப்படுத்த நகரில் எங்கும் எப்போதும், போலீசார் நிறுத்தப்படுவதில்லை.

மெயின்பஜார் மருந்து கடை ஒன்றில் நேற்று மருந்து வாங்க வந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். ஆம்புலன்ஸ் மெயின்பஜாரில் வராது என டிரைவர்கள் மறுத்தை தொடர்ந்து, பயணியை ஏற்றி சென்ற ஆட்டோவை நிறுத்தி, அதில் மயங்கியவரை ஏற்றி அனுப்பி வைத்தனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக ஆட்டோ செல்ல முடியாமல் தாமதமாக சென்றதால் மேலதெரு தனியார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் முதியவர் உயிரிழந்தார்.

மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் காளிதாஸ்: மெயின் பஜார் ஆக்கிரமிப்பால் சுருங்கி ஒன்றையடி பாதையாக மாறிவிட்டது. ஆக்கிரமிப்புகளை மக்களுக்காக அகற்ற வேண்டும். காய்கறி மார்க்கெட்டை இடம் மாற்ற வேண்டும். போக்குவரத்தை முறைப்படுத்த போலீசாரை நிறுத்த வேண்டும். மெயின்பஜார், நகர் பகுதி சாலைகளில் ஹெல்மெட் பைன் போடுவதை நிறுத்த வேண்டும். நேற்று நெரிசல் காரணமாக மெயின் பஜாரில் ஆம்புலன்ஸ் வர முடியாமல், ஆட்டோவில் எடுத்து செல்லப்பட்ட முதியவர் பெரியசாமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதற்கு ஆக்கிரமிப்புகளும், போக்குவரத்தை முறைப்படுத்தாத போலீசாரே காரணம் என்றார்.

Related posts

மெரினா கடற்கரையில் திருட்டு; 2 குற்றவாளிகளை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவலருக்கு பாராட்டு!

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ்அப் சேனல் துவக்கம்!

சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!