விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார். அறநிலைத்துறைக்கு சொந்தமான கோயிலில் பட்டியலின மக்கள் வழிப்பட எதிர்ப்பு தெரிவித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று மாற்று சமூகத்தினர் கூறிய நிலையில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஏப்ரலில் 10 நாள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதையடுத்து ஏப்ரல் 7ம் தேதி பட்டியலினத்தை சேர்ந்த இளைஞர் சாமியை வணங்குவதற்காக கோயிலுக்குள் சென்றுள்ளார். இதன்காரணமாக ஊர் மக்களுக்கும் பட்டியலினத்தை சேர்ந்தவர்களுக்கும் பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையயைடுத்து பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் சாலை போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஊர் மக்களும் கோயிலின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் மற்றும் தங்களது ரேஷன் அட்டைகளை திருப்பி தருகிறோம் போன்ற போராட்டங்களில் ஈடுப்பட்டனர்.

பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் நாங்கள் கோயிலுக்குள் செல்ல வேண்டும் எனவும், கோயிலுக்குள் அனுமதிக்க மாட்டோம் இது எங்களது சொந்த கோயில் என ஊர் தரப்பு மக்களும், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் 8 சமாதான கூட்டங்கள், கோட்டாட்சியர் தலைமையிலும் சமாதான கூட்டங்கள் நடைபெற்றது. இருந்தபோதிலும் இருதரப்பு மக்களிடமும் ஒரு சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.

இதையடுத்து குற்றவியல் தீர்ப்பின் அடிப்படையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கோயிலுக்குள் சீல் வைக்கப்பட்டது. இரு தரப்பினருக்கும் எவ்விதமான அசம்பாவிதமும் நடைபெற்றுவிட கூடாது என்பதற்காக பல்வேறு சமாதான கூட்டங்கள் பேசி சுமூகமான முடிவு எட்டப்படாததால் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியான நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவின்பேரில், கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் இரு தரப்பு மக்களுக்கும் சம்மன் அனுப்பியுள்ளார். கதிரவன் என்ற இளைஞர் கோயிலுக்குள் நுழைந்ததால் அவர் குடும்பத்தை சேர்ந்த 3 பேரை ஊர் மக்கள் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை

வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு

பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணாவின் டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்