விழுப்புரத்தில் அழகிப்போட்டி; மிஸ் கூவாகம் 2024 பட்டத்தை தட்டிச் சென்றார் சென்னை ஷம்தி

விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த ஷம்தி முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தை புதுச்சேரி வர்ஷாவும், மூன்றாம் இடத்தை தூத்துக்குடி சுபப்பிரியாவும் பெற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்க இந்தியா முழுவதும் இருந்து திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள்ளனர். இவர்களுக்காக பல்வேறு அமைப்பினர் மிஸ் கூவாகம் உள்ளிட்ட போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் சென்னை திருநங்கை நாயக் அமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மிஸ் கூவாகம் 2024 அழகிப் போட்டி நேற்று இரவு நடந்தது. அதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், திரைப்பட நடிகர் காந்த், நடிகைகள் அம்பிகா, தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடுவர்களாக சினிமா நடன இயக்குநர் ஜப்ரி விதார்த், கவிதா பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் 22 திருநங்கைகள் கலந்து கொண்டு முதல் கட்ட போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அதிலிருந்து இரண்டாம் கட்ட போட்டிக்கு 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த 7 பேருக்கும் 3ம் கட்ட போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பெண்மையை உணர்வது, பெண்மை குறித்த பார்வை போன்ற கேள்விகளுக்கு போட்டியாளர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில் இறுதியாக 3 பேர் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி மிஸ் கூவாகம்-2024 பட்டத்தை வட சென்னையை சேர்ந்த ஷம்தி தட்டிச்சென்றார். இரண்டாம் இடத்தை புதுச்சேரியை சேர்ந்த வர்ஷா ஷெட்டி, மூன்றாம் இடத்தை 3ம் இடத்தை தூத்துக்குடியை சேர்ந்த சுபப்பிரியா ஆகியோர் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை திருநாயக் அமைப்பினர் கிரீடம் மற்றும் மலர் கொத்து வழங்கி பாராட்டினர்.

இன்று காலை 10 மணி அளவில் விழுப்புரம் ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில் தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி முதல்கட்ட தேர்வு நடக்கிறது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கு இறுதிப்போட்டி மாலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நடத்தப்படுகிறது.

தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி
கூத்தாண்டவர் கோயில் சித்திரை பெருவிழா கடந்த 9ம் தேதி மாரியம்மன் கோயில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இன்று 22ம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நாளை (23ம் தேதி) நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைதொடர்ந்து 24ம் தேதி சித்திரை தேரோட்டம் மற்றும் 25ம் தேதி விடையாத்தியும், 26ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சியுடன் 18 நாள் சித்திரை பெருவிழா நிறைவுபெறுகிறது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்