விஜயகாந்த் மறைவை ஒட்டி சென்னையில் இன்று நடைபெற இருந்த வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து..!!

சென்னை: விஜயகாந்த் மறைவை ஒட்டி சென்னையில் இன்று நடைபெற இருந்த வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சாதாரண குடும்பத்தில் 1952 ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார். இவர் 1979 ம் ஆண்டில் திரைத்துறையில் நுழைந்து வெற்றிகரமாக வளர்ந்து புரட்சி கலைஞர் என அனைவராலும் ஏற்கப்பட்டார். காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வேடத்தில் அதிகபட்ச திரைப்படங்களில் மிகச் சிறப்பாக நடித்த விஜயகாந்த் அனைவராலும் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார்.

திரைத்துறையில் புகழ் பெற்ற விஜயகாந்த் தென்னிந்திய திரைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார். சிறுவயது முதலே அரசியல் ஆர்வம் மேலோங்கி இருந்ததால் 2005 செப்டம்பர் 14ம் தேதி தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்கி, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முக்கிய இடம் பெற்றார். 2011 தேர்தலில், அஇஅதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை வென்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் எதிர்கட்சித் தலைவராக ஐந்தாண்டுகள் செயல்பட்டார்.

உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 26ம் தேதி இரவு 9 மணிக்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள கட்சிதலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்றும் நாளையும் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தொடங்க இருந்த மார்கழியில் மக்களிசை முதல் நாள் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.  இந்நிலையில் விஜயகாந்த் மறைவை ஒட்டி சென்னை நந்தம்பாக்கத்தில் இன்று நடைபெற இருந்த பெரியாரின் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பில் சென்னை விமான நிலையம்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

இந்தியா – கம்போடியா இடையே முதல் நேரடி விமானசேவை