கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமன பயிற்சியை ஒத்தி வைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்திற்கான பயிற்சியை ஒத்தி வைக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த செல்வராணி, ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
கால்நடைத்துறையில், 538 கால்நடை ஆய்வாளர் பணிக்கு நேரடி நியமனம் மூலம் விண்ணப்பம் கோரி கடந்த 2019ல் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நான், கால்நடை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவள். பட்டப்படிப்பை முடித்துள்ளேன். இந்த நேரடி நியமனத்தேர்வுக்கு 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் திடீரென்று அந்த உத்தரவை ரத்து செய்து விட்டனர்.

இந்த சூழலில், 24.3.2023 அன்று அறிவிப்புப்படி கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்திற்கு காலியாக உள்ள 404 பணியிடங்களுக்கு, துறை ரீதியாகவும், வாரிசு வேலைக்கு காத்திருப்போர் என 121 பேரை தேர்வு செய்து பயிற்சியளித்து வருகின்றனர். ஒவ்வொரு பணி நியமனத்தின் போதும், மொத்த பணியிட நியமனத்தில் 5 சதவீதத்திற்கும் மேல் வாரிசு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை மீறியுள்ளனர்.
எனவே, 24.3.2023 அன்று அறிவிப்புப்படி கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்திற்காக துறை ரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்தமைக்கு தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றி நேரடி நியமனம் மூலம் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, இவ்வழக்கில் கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கு விதிக்கப்பட்ட 5 சதவீத உச்சவரம்பு மீறப்பட்டுள்ளது என்பதை மனுதாரர் நிரூபித்துள்ளார். எனவே, 24.3.2023 அன்று அறிவிப்புப்படி கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்திற்காக துறை ரீதியாகவும், வாரிசு வேலை அடிப்படையிலும் ஆட்களை தேர்வு செய்தவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சியை ஒத்தி வைக்க வேண்டும். மேலும் இது குறித்து, கால்நடை துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

பக்தர்கள் அளிக்கும் காணிக்கை மோசடி தொடர்பாக பேசியதால் முன்னாள் கோயில் அறங்காவலரை வழிமறித்து கத்தி முனையில் கொலை மிரட்டல்: அர்ச்சகர் காளிதாஸ் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

மேகதாது பிரச்சனையில் தமிழ்நாடும், கர்நாடகமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்