வேளச்சேரி, பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம்: 15 ஆண்டுகளுக்கு பிறகு புத்துயிர் பெறுகிறது; டிசம்பரில் செயல்பாட்டிற்கு வருகிறது; அதிகாரிகள் தகவல்

சென்னை: வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டமானது ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு டிசம்பர் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், விரைவான போக்குவரத்துக்காக சென்னை கடற்கரை முதல்- வேளச்சேரி வரை பறக்கும் ரயில் திட்டம் 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. 1997ல் தொடங்கிய திட்டம் மூன்று கட்டங்களாக நடந்து 2007ல் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ரூ.495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே 5 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம் பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள 500 மீட்டர் தூரத்திற்கான பணிகள் அப்படியே நின்றது. இதனால் 2007ல் இருந்து பறக்கும் ரயில் சென்னை கடற்கரை-வேளச்சேரி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பணிகள் 2010ல் நிறைவடையாததால், திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை சிக்னல் கட்டமைப்புகளும் முடிவடைந்தன. இந்நிலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 15 ஆண்டுகளுக்கு பின் தீர்வுக்கு வந்துள்ளது. வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது. இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை உயர் அதிகாரி கூறுகையில்: சென்னை போக்குவரத்தில் அடுத்தகட்டமாக மெட்ரோ ரயில் சேவை முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த வகையில் 15 ஆண்டுகளாக பிரச்னையில் இருந்த வந்த பறக்கும் மின்சார ரயில் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

வேளச்சேரி முதல் ஆதம்பாக்கம் வரையிலான 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.730 கோடி மதிப்பீட்டில் பணிகள் முடிந்துள்ளது. ஆனால் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளை மேற்கொள்ள ரூ.30 கோடி செலவிடப்பட்டது. இந்த ரயில் பாதையானது கடற்கரை முதல் தாம்பரம் புறநகர் மின்சார ரயில் பாதையின் மேல் அமைகிறது. அதனை தொடர்ந்து இந்த திட்டத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் வரிசையாக பிரமாண்டமான தூண்கள் அமைத்து, மேம்பாலம் இணைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெறப்பட்டு டிசம்பர் மாதம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* 1997ல் ஆரம்பித்த ரயில் பயணம்
சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக பறக்கும் ரயில் திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டனர். முதல் கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் இயக்கப்பட்டது. 2007ம் ஆண்டு ரூ.877.59 கோடியில் 2ம் கட்டமாக மயிலாப்பூர் முதல் வேளச்சேரி தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அதன் பிறகு ரயில் இயக்கப்பட்டது

15 ஆண்டு கனவு முடிவுக்கு வந்தது
* வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் திட்டம் டிசம்பர் மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது.
* ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியின் அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஏற்கனவே 250 மீட்டர் தூரத்திற்கு 18 தாங்கும் பாலங்கள் அமைக்கப்பட்ட நிலையில் மொத்தம் 36 தாங்கும் பாலங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
* இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் பணம் சேமிப்பு, விரைவான, பாதுகாப்பான பயணம் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
* பரங்கிமலையில் பறக்கும் ரயில் திட்டம், மின்சார ரயில் திட்டம் மற்றும் மெட்ரோ ரயில் என மும்முனை நிலையமாக அமைகிறது.

Related posts

திருச்செந்தூரில் நாளை மறுநாள் வைகாசி விசாகம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு சுற்றுசூழல் அனுமதியை வழங்கியது தமிழ்நாடு அரசு

குளச்சல் பகுதியில் கனமழை: கட்டுமரங்கள் மீன் பிடிக்க செல்லவில்லை