வேதாரண்யத்தில் 3 நாட்களாக மக்களை அச்சுறுத்திய காட்டெருமை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

வேதாரண்யம்: வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி பகுதியில் கடந்த 3 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி சுற்றித்திரிந்த காட்டெருமையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி கிராமத்தில், கடந்த 3 நாட்களுக்கு முன் காட்டெருமை ஒன்று சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். பின்னர் காட்டெருமையை பிடிக்க வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி நாகப்பட்டினம் மாவட்ட வன பாதுகாவலர் அபிஷேக் டோமர், கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், தலைஞாயிறு, வேளாங்கண்ணியில் இருந்து தீயணைப்பு துறையினர் மற்றும் வேதாரண்யம் டிஎஸ்பி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் போலீசார் காட்டெருமையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களாக தேடியவனத்துறையினர் நேற்று முன்தினம் நாலுவேதபதியில் காட்டெருமை இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். பின்பு சென்னையில் இருந்து மயக்க ஊசி செலுத்தும் நிபுணர்கள் வரவைக்கப்பட்டு, நேற்று அதிகாலை காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்த சென்றனர். ஆனால் அதற்குள் எருமை தப்பி சென்று விட்டது.

பின்னர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று பகல் புஷ்பவனம் பகுதியில் காட்டெருமை சுற்றித்திரிவதாக தகவல் கிடைத்து, அங்கு சென்ற அதிகாரிகள் அதனை சுற்றி வளைத்து மயக்க ஊசி செலுத்தினர். பின்பு கிரேன் மூலம் மாட்டை லாரியில் ஏற்றி மீண்டும் பொன்னமராவதிக்கு அனுப்பி வைத்தனர். காட்டெருமையை பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த காட்டெருமை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதில் இருந்து வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதிக்கு எப்படி வந்தது என்று வனத்துறை விசாரித்து வருகின்றனர்.

Related posts

செல்வப்பெருந்தகை விமர்சனம்; வஞ்சக புத்தி கொண்ட மோடிக்கு மனம் ஒன்றிய தியானம் என்றும் கிட்டாது

இசைப் பள்ளிகள் மற்றும் கவின் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது: இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அழைப்பு

வார இறுதி நாட்களை முன்னிட்டு 1400 சிறப்பு பஸ்கள் இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்