வத்தல்மலை அடிவாரத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு: அதிகாலையில் வனப்பகுதியில் விடுவிப்பு

தர்மபுரி: வத்தல்மலை அடிவாரத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானையை, நேற்று முன்தினம் நள்ளிரவு மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், லாரி மூலம் கொண்டு சென்று அதிகாலை அஞ்செட்டி வனப்பகுதியில் விடுவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனப்பகுதி வழியாக அண்ணாமலை அள்ளிக்கு, கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஒற்றை ஆண் யானை வந்தது. அண்ணாமலை அள்ளியில் இருந்து பெரியாம்பட்டி வந்த யானை, அங்கு சவுளுப்பட்டியில் 20 வயது இளம்பெண்ணை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்த பெண், தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அந்த யானை பெரியாம்பட்டியில் இருந்து, திருப்பத்தூர் ரோடு வழியாக சோலைக்கொட்டாய் மான்காரன் கொட்டாய் கரடுக்கு வந்தது. அங்கிருந்து விரட்டப்பட்ட ஒற்றை யானை, தர்மபுரி வேடியப்பன் திட்டு பகுதியில் பதுங்கியது. பின்னர், அங்கிருந்து யானை அன்னசாகரம், எர்ரப்பட்டி வழியாக குட்டூர் ஏரியில் தஞ்சமடைந்தது.

தொடர்ந்து லளிகம் ஏரி, நார்த்தம்பட்டி ஏரியில் முகாமிட்டது. வனத்துறையால் விரட்டப்படட யானை முத்தம்பட்டி, தொப்பூர் காட்டின் வழியாக, வத்தல்மலை வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. கடத்தூர், மணியம்பாடி, பொம்மிடி போன்ற பகுதிகளில், வத்தல்மலை வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் சுற்றித்திரிந்தது. இந்த யானையின் நடமாட்டம் குறித்து, ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக ஓசூரில் இருந்து கால்நடை மருத்துவ குழுவினர், மருத்துவர் பிரகாசம் தலைமையில் யானை இருக்கும் பகுதியில் நேற்று முன்தினம் முகாமிட்டனர். இரவு 11 மணியளவில் துப்பாக்கி மூலமாக யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. ஆனால், யானைக்கு மயக்கம் ஏற்படவில்லை.

தொடர்ந்து ஒரு மணி நேரம் கழித்து, மேலும் ஒரு மயக்க ஊசி, யானை மீது செலுத்தப்பட்டது. இதையடுத்து யானை அங்குமிங்கும் ஓடித்திரிந்தது. பின்னர், சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர் யானை மயங்கியது. இதையடுத்து அங்கு கிரேன் வரவழைக்கப்பட்டு, அதிகாலை 2 மணியளவில் யானையை லாரியில் ஏற்றிச்சென்றனர். நேற்று அதிகாலை அஞ்செட்டி வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, யானை அங்கு விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த யானையின் நடமாட்டத்தை, வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Related posts

பிரதமராக பொறுப்பேற்ற மோடி விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிற்கு முதல் கையெழுத்திட்டார்!!

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாட்டம்