வத்தலக்குண்டு அருகே பரபரப்பு மண்டகப்படி கேட்டு கோயிலில் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்: இரவு முழுவதும் கோயிலில் தங்கிய பொதுமக்கள்


வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு அருகே, ஒரு சமூக மக்கள் கோயில் திருவிழாவில் சமஉரிமை மண்டகப்படி உரிமை கேட்டு, கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு என்னும் ஊர் உள்ளது. இங்கு 2700 வீடுகள் உள்ளன; சுமார் 11 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு பிரசித்தி பெற்ற மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோயிலில் திருவிழா நடைபெறும்.

இந்த திருவிழாவில் சம உரிமை மண்டகப்படி வேண்டும் என, பழைய வத்தலக்குண்டுவைச் சேர்ந்த ஒரு சமூக பொதுமக்கள், ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரதாஸ், இருளையா, பாண்டீஸ்வரன் மற்றும் 250 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேர் கடந்த 19ம் தேதி கோயிலில் தரையில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். 2 நாள் போராட்டம் நடந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடந்த 27ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறியதால் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், கடந்த 27ம் தேதி திண்டுக்கல்லில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் கோட்டாட்சியர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என அதிகாரிகள் கூறியதை பொதுமக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து மீண்டும் கடந்த 27ம் தேதி மாலை மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கினர். இந்நிலையில், நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி கோரிக்கையை ஏற்று, திண்டுக்கல்லில் ஆர்டிஓ கமலக்கண்ணன் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில் சமூக மக்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அதிகாரிகள் ஒரு நாள் அவகாசம் கேட்டதாக தெரிகிறது. ஆனால், பொதுமக்கள் இதையேற்காமல், சம உரிமை மண்டகப்படி வழங்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என நேற்று இரவு கோயிலில் உணவு சமைத்து, அங்கேயே மீண்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து சமூக ஒருங்கிணைப்பாளர் சந்திரதாஸ் கூறுகையில், ‘சமஉரிமை மண்டகப்படி வழங்காவிட்டால் விரைவில் பைபாஸ் சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம்’ என்றார்.

Related posts

ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ்

அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்

மகிந்திரா எக்ஸ்யுவி 700 ஏஎக்ஸ்5 செலக்ட்