வண்ணாரப்பேட்டையில் மரச்சாமான்கள் தயாரிக்கும் கம்பெனியில் திடீர் தீ விபத்து

தண்டையார்பேட்டை: சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் சமிபுல்லா (40). இவர், வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மரக்கட்டில், பீரோ செய்யும் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த கம்பெனியில் 4 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். நேற்று இரவு வழக்கம்போல் விற்பனை முடிந்ததும் கம்பெனியை மூடிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை கம்பெனியில் இருந்து கரும்புகை வந்துள்ளது. திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த 40க்கும் மேற்பட்ட வீரர்கள் தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பக்கத்து வீடுகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீவிபத்தில் மரக்கட்டில், பீரோ செய்யும் கம்பெனியில் வைத்திருந்த 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

மழைக்காலம் வந்தாச்சு ரயிலில் ஒழுகும் மழை நீருக்கு எப்போது தீர்வு: பயணிகள் கேள்வி

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!