வந்தே பாரத் ரயிலில் விரைவில் ஸ்லீப்பர் பெட்டிகள்: சென்னை ஐசிஎப் அதிகாரி தகவல்

சென்னை: வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் என சென்னை ஐசிஎப் அதிகாரிகள் கூறினர். வந்தே பாரத் ரயில் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 2018ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. 2022ம் ஆண்டின் தொடக்கம் முதல் தற்போது வரை மொத்தம் 14 வந்தே பாரத் ரயில்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வந்தே பாரத் ரயிலை தயாரிக்க ரூ.110 கோடி முதல் 120 வரை செலவாகிறது. இந்த வந்தே பாரத் ரயிலை மணிக்கு 160-180 கி.மீ வேகத்தில் இயக்கலாம். உள்நாட்டில் அதிகளவு உற்பத்தியான பாகங்கள் மூலம் ரயில்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொதுமக்களிடமிருந்து வந்தே பாரத் ரயிலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. வந்தே பாரத் ரயில்கள் பெரும்பாலும் நிரம்பி விடுகின்றன. தற்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. மேலும், வந்தே பாரத் ரயில் தயாரிப்பை அதிகப்படுத்த ஐசிஎப் க்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. பயணிகளுக்கு அடுத்தக்கட்ட அனுபவத்தை கொடுக்க ரயில்வே அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர். தற்போது 4 வகையான வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணியில் சென்னை ஐசிஎப் உள்ளது.

இது குறித்து ஐசிஎப் அதிகாரி தெரிவிக்கையில்: சென்னை ஐசிஎப்பில் வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் முன் மாதிரி தொடர் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. தற்போது இயக்கப்படுகின்ற வந்தே பாரத் ரயில்கள் 5-6 மணி நேரத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது. பயணிகள் வெகு தொலைவில் செல்ல வேண்டும் என்றால் நீண்ட நேரம் உட்கார முடியாது. இதனை கருத்தில் கொண்டு தற்போது ஸ்லீப்பர் பெட்டி கொண்ட வந்தே பாரத் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் வடிவமைப்பில் உள்ளது. இதற்கான ஒப்புதலை ரயில்வே வாரியம் அளித்தால் 80 வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிக்கப்படும்,இது போன்று சென்னை ஐசிஎப்பில் இந்த நிதியாண்டில் இருக்கை வசதி கொண்ட 736 பெட்டிகள் தயாரிக்கப்படும். இந்தாண்டு இறுதிக்குள் ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிக்கப்படும்.வரும் காலங்களில் சதாப்தி,ராஜதானி போன்ற ரயில்கள் வந்தே பாரத் ரயில்களாக மாற்றப்பட்டு இயக்கப்படும்.

Related posts

ரியல்எஸ்டேட் ஊழியரை மிரட்டி பணம் பறித்தவர்கள் கைது..!!

கோவை சின்னக்கல்லாறில் 5 செ.மீ. மழை பதிவு..!!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.54,200க்கு விற்பனை..!!