கடலூரில் நீட் தேர்வு ரத்து செய்ய வலுவர்த்தி உண்ணாவிரத போராட்டம்: அமைச்சர்கள் சூளுரை

கடலூர்: கடலூரில் நீட் தேர்வு ரத்து செய்ய வலுவர்த்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசியதாவது: நீட் தேர்வு இன்று பல்வேறு உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கிறது, ஒன்றிய அரசு கண்டுகொள்ளாமல்  தான் தோன்றித்தனமாக செயல்படுகிறது. இன்றைய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்ய திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

எனவே திமுகவை சேர்ந்த இளைஞர் அணியினர் மற்றும் மாணவர் அணியினர் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கட்டுக்கோப்பாக நடந்து கொண்டு போராட்டம் நடத்த வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மிகச் சிறப்பாக நடந்தது என்று முதலமைச்சருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பின்னர், தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சி.வெ கணேசன் பேசியதாவது: திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கும் குறிப்பாக தமிழக ஆளுநருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நீட் தேர்வில் வெற்றி அடைய முடியாததால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அப்போது முதலமைச்சர் நேரடியாக சென்று அவருக்கு ஆறுதல் கூறி வந்தார். இதே போல சென்னை சேர்ந்த ஜெகதீசன்  தற்கொலை செய்து கொண்ட பிறகு அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டமன்ற தீர்மானத்தை நீண்ட காலமாக கிடப்பில் போட்டுவிட்டு தற்போது கவர்னர் மீண்டும் அதை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். நம்முடைய கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுக்காக இந்த நீட் தேர்வை ரத்து செய்யும் வரை இறுதிவரை போராடுவேன் என்று கூறியுள்ளார்.

சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மட்டும் அடக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர். உலகத்திலேயே காலை உணவு திட்டத்தை முதலில் கொண்டு வந்து செயல்படுத்தியவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தான். எதிர்க்கட்சிகளால் கொடுக்க முடியாது என்று கூறப்பட்ட மகளிர் உரிமை தொகை வரும் செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கிறது. சாதாரண ஏழை குடும்பங்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Related posts

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல்

நெல்லை அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதிய 6 மாடி கட்டிடப்பணிகள் விறுவிறுப்பு: நவம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

சிக்கிமில் எஸ்.கே.எம். கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது