குமரகோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடி யேற்றத்துடன் இன்று துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை துவங்கியது. 10 நாட்கள் விழா நடைபெறும். விழாவை முன்னிட்டு நேற்று இரவு விநாயகர் உற்சவம் நடைபெற்றது. இன்று காலை சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் முருகப் பெருமான் எழுந்தருளி அருள் பாலித்தார். கோயில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

வைகாசி விசாக பெருவிழாவையொட்டி தினந்தோறும் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். காலை நிகழ்ச்சிகளான சூர்யபிரபை, தேவேந்திர மயில் வாகனம், கண்ணாடி விமானம், திருத்தேர், மான் வாகனம் போன்ற வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இரவு நிகழ்ச்சிகளான ஆடு வாகனம், அன்ன வாகனம், கேடயம், யானை வாகனம், குதிரை வாகனம், மாவடி சேவை, சூரன் மயில் வாகனம் போன்ற வாகனங்களில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சி ஜூன் 3ம்தேதி நடக்கிறது. கோயில் வளாகத்தில் உள்ள குமரன் கலை அரங்கில் தினமும் இரவு 7 மணி அளவில் கலை நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதி தாசன், ஆய்வாளர் பிரித்திகா, செயல் அலுவலர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

Related posts

கஞ்சா போதையில் நடத்துனரை தாக்கிய 3 பேர் கைது

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் தங்களது கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு

கத்திகளுடன் பிடிபட்ட 4 சிறுவர்கள்: போலீஸ் விசாரணை