ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை, ஜிஎஸ்டியால் கோவையில் மட்டும் 30,000 குறுந்தொழில் நிறுவனங்கள் மூடல்: ‘என்னது கொரோனா காலத்தில் கடன் கொடுத்தார்களா? ஒரு பைசா கூட தரல…’ முழு பூசணிக்காயை மோடி சோற்றில் மறைக்கிறார் என தொழில்முனைவோர் சரமாரி குற்றச்சாட்டு

தமிழகத்தில், வரும் ஏப்.19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த பாஜ தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனா காலத்தில், தொழில் துறையினர் நெருக்கடியில் இருந்தபோது, ரூ.2 லட்சம் கோடி நிதி உதவி தந்து, தொழிலை மீட்டோம்’ என்று கூறினார். இதற்கு தொழில் நகரமான கோவையில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. பிரதமர் மோடி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயல்கிறார் என தொழில்முனைவோர் குற்றம்சாட்டி உள்ளனர்.

கோவை மாவட்டத்தில், லேத் ஒர்க்‌ஷாப், பவுண்டரி, கிரைண்டர், ஆட்டோமொபைல், நகை தயாரிப்பு, கம்ப்ரஷர் உற்பத்தி என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவற்றில், நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஒன்றிய அரசின் தவறான பொருளாதார கொள்கை காரணமாக, கடந்த 10 ஆண்டு காலமாக இத்தொழில்துறை சரிவை நோக்கியே செல்கின்றன. உற்பத்தி இழப்பு மற்றும் வேலைவாய்ப்பு பறிப்பு என எதிர்மறை நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதுதொடர்பாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் ஊரக குறுந்தொழில் முனைவோர் சங்க (டாக்ட்) கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு காலத்தில், கோவை தொழில்துறையினர் கடும் நெருக்கடியில் இருந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் 2 லட்சம் கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியதாக மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார். இதில், ஒரு பைசாகூட எங்களது கைகளுக்கு வந்து சேரவில்லை. ஏற்கனவே, வங்கிகளில் நாங்கள் பெற்ற கடன்தொகைக்கு வட்டியும் செலுத்த முடியவில்லை, அசல் தொகையையும் திரும்ப செலுத்த முடியாமல் தவிக்கிறோம்.

வங்கிகளில் கடன் கேட்டு, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கும் கடனுதவி கிடைக்கவில்லை. வங்கியில் கடனுதவி பெறாத தொழில்முனைவோர், ஒருவருக்குகூட கொரோனா காலத்தில் கடனுதவி தரவில்லை. இதுவே, யதார்த்தம். கோவிட் கால கடனுதவி திட்டமானது பெரும் முதலாளிகளுக்கும், வங்கிகளில் பெருமளவில் கடன் பெற்று, வரவு-செலவு வைத்திருப்போருக்கும் மட்டுமே கிடைத்திருக்கலாம். புதிதாக கடன் பெற முயன்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு ஒன்றிய அரசு உதவவில்லை. தமிழ்நாடு அரசு, மின்கட்டணத்தை உயர்த்தியதைவிட, ஒன்றிய அரசு விதித்த ஜி.எஸ்.டி வரி சதவீதம் அதிகம்.

இதுவே, தொழில்துறை நலிவடைய பெரும் காரணமாக அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு, பதிலடி தரும் விதமாக, தொழில்துறையினர் இந்த தேர்தலில் தங்களது கடமையை செய்வார்கள். கடந்த 10 ஆண்டு கால பாஜ ஆட்சியில் ஜிஎஸ்டி வரி விதிப்பு, பணமதிப்பிழப்பு, மூலப்பொருட்கள் விலை ஏற்றம், தவறான ஏற்றுமதி-இறக்குமதி கொள்கை, யூக வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், தொழில்துறை கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி என்பது அபரிமிதமானது. இது, இத்தொழிலை சிதைத்துவிட்டது.

குஜராத்தில் இருந்து கள்ளச்சந்தையில் விற்பனைக்கு வரும் இன்ஜினீயரிங் பொருட்கள், தமிழ்நாட்டில் நியாயமாக தொழில்செய்வோருக்கு கடும் நெருக்கடியை தருகிறது. இதன் காரணமாக, கோவை மண்டலத்தில் 30 சதவீத (30,000 நிறுவனங்கள்) குறுந்தொழில் நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன. இத்தொழிலை மீட்டெடுக்க ஒன்றிய அரசு உதவாவிடில், மீதமுள்ள தொழில் நிறுவனங்களும் காணாமல் போய்விடும். இதுபோன்று ஏராளமான பிரச்னைகளுக்கு ஒன்றிய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாமல், மின்கட்டண உயர்வால் தொழில்கள் நசிவு என மாநில அரசு மீது பழிபோடுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை.

இது, தேர்தலுக்காக பிரதமர் மோடி அவிழ்த்து விடும் பொய்களில் ஒன்று. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் கோவை தொழில்முனைவோர் மீண்டு வந்துள்ளனர் என பிரதமர் கூறுவது வேடிக்கையானது. மின்சார கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அது, பரிசீலனையில் உள்ளது. மாநில அரசு மீது பழி போடும் பிரதமர் மோடி, தொழில்துறையை காப்பாற்ற ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்பதை பட்டியல் போட வேண்டும். குறுந்தொழில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு, மூலப்பொருள் விலை குறைப்பு, வங்கிக்கடன் அனுமதி போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், நலிந்துபோய் கிடக்கும் இத்துறையை யாராலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

* 60% உற்பத்தி இழப்பு சரி பாதி வருவாய் இழப்பு
ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு முன்பாக, கோவை மாவட்டத்தில், லேத் ஒர்க்‌ஷாப், பவுண்டரி, கிரைண்டர், ஆட்டோமொபைல் உதிரிபாகம் தயாரிப்பு என பல்வேறு வகையான குறுந்தொழில் நிறுவனங்கள் மூன்று ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் இயங்கி வந்தன. ஆனால், தற்போது 12 மணி நேரம் இயங்குவதே பெரிய விஷயமாக மாறிவிட்டது. இந்நிறுவனங்களில் தற்போதைய நிலவரப்படி 60 சதவீதம் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாதிக்கு மேலான நிறுவனங்கள், பெயரளவுக்கு மட்டுமே இயங்கி வருகின்றன. உதாரணமாக, பம்பு, மோட்டார் தயாரிப்பு துறையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, வருடம் ரூ.5,500 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது. 20 சதவீதம் ஏற்றுமதியும் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ரூ.3 ஆயிரம் அளவுக்கு வர்த்தகம் நடப்பதே பெரும் சிரமம் ஆகி விட்டது. ஏற்றுமதி வெறும் 5 சதவீதமாக குறைந்துவிட்டது. இதுபோல், ஒவ்வொரு துறையிலும் சரி பாதி, வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

Related posts

மன்னார்குடி அருகே கருத்தநாதபுரத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோனில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்