ஒன்றிய அரசின் வரி பகிர்வு ஓரவஞ்சனை குறித்து தமிழ்நாடு முழுவதும் போஸ்டர்: கொடுத்ததோ ரூ. 2.56 லட்சம் கோடி; கிடைத்ததோ அல்வா… செந்தில், கவுண்டமணி காமெடி பாணியில் விமர்சனம்

ஒன்றிய பாஜ அரசு ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு பாஜ ஆளாத மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வரி பகிர்வில் பாரபட்சம் காட்டுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜிஎஸ்டி இழப்பீடு தொகை தராதது, பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்காதது உள்ளிட்ட பல வழிகளில் பாஜ ஆளாத மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒன்றிய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தொடர்ந்து ஆதாரத்துடன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், பெயர் அளவுக்கு குறைந்த அளவிலான தொகையை மட்டுமே அப்போது விடுவிக்கும். குறிப்பாக, ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டில் இருந்து கடந்த 2018-19 நிதியாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை 5 ஆண்டுகளில் ஜிஎஸ்டி மூலம் மொத்தம் ரூ.4,03,982 கோடி கிடைத்து உள்ளது.

இதுதவிர தனிநபர், நிறுவனங்கள் மூலமான நேரடி வரி வசூலாக தமிழ்நாட்டில் இருந்து ரூ.4,00,672 கோடி கிடைத்து உள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் இருந்து ஒன்றிய அரசுக்கு ரூ.8.04 லட்சம் கோடி கிடைத்து உள்ளது. ஆனால், இதே காலக்கட்டத்தில் தமிழ்நாட்டுக்கு வரிப்பகிர்வாக ரூ.1,58,145.62 கோடி மட்டுமே வழங்கி உள்ளது. குறிப்பாக பாஜ ஆளாத தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சேர்த்து ரூ.1,92,722 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜ ஆளும் உ.பி.க்குமட்டும் ரூ.2,18,816 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து ஒரு ரூபாய் கொடுத்தால் வெறும் 29 பைசா மட்டுமே ஒன்றிய அரசு தருகிறது. ஆனால், பாஜ ஆளும் மாநிலங்களில் அவர்கள் கொடுத்ததைவிட அதிகமாக திருப்பி கொடுக்கிறது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கேள்வி எழுப்பினால் ஒன்றிய அரசு முறையாக பதிலளிக்கவில்லை. இவ்வாறு நிதி பகிர்வில் பாஜ ஆளாத மாநிலங்களுக்கு ஓரவஞ்சனை செய்யும் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகத்தில் திமுக நூதன பிரசாரத்தை கையில் எடுத்து உள்ளது. வரியை மட்டும் வாங்கி கொண்டு ஏமாற்றும் ஒன்றிய அரசின் செயலை அமல்படுத்தும் விதமாக மக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டத்தை திமுக முன்னெடுத்தது. இதன் எதிரொலியாக ஒன்றிய அரசின் ஓரவஞ்சனை வரி பகிர்வு குறித்து தமிழ்நாடு முழுவதும் முக்கிய இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், ‘ஒன்றிய அரசுக்கு கொடுத்தது ரூ.2,56,623 கோடி, நமக்கு கிடைத்தது அல்வா…!’ என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் கோவை சரவணம்பட்டி, சக்தி சாலை, துடியலூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், `ஒன்றியத்தின் ஓரவஞ்சனை பற்றி தெரியுமா?, தமிழ்நாடு அளிக்கும் ஒரு ரூபாயிலிருந்து ஒன்றிய பாஜ அரசு திருப்பி தரும் வரிப்பகிர்வு 26 பைசா. உத்தரபிரதேசத்திற்கு ஒரு ரூபாயில் இருந்து 2.73 ரூபாய் வரி பகிர்வு அளிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

நெல்லை, பாளையங்கோட்டையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில் ஒன்றிய அரசு மாநில அரசுகளிடம் வரி வசூலிப்பதையும், மீண்டும் வளர்ச்சி பணிகளுக்கு மாநில அரசுக்கு திருப்பி வழங்கப்படும் தொகையையும் பட்டியலிட்டு செந்தில், கவுண்டமணி காமெடி பாணியில் விமர்சனம் செய்யபட்டு உள்ளது. அதல், ஒன்றிய அரசு வரி வசூலில் கர்நாடக மாநிலத்திற்கு ரூ.100க்கு வெறும் ரூ.13.9ஐ திரும்ப அளிப்பதாகவும், தமிழ்நாட்டிற்கு ரூ.100க்கு ரூ.29.7ஐ திரும்ப கொடுப்பதாகவும், கேரளாவுக்கு ரூ.100க்கு ரூ.63.40 அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் பீகார் மாநிலம் ரூ.100 அளித்தால் ரூ.922.5ஐ வாரி வழங்கி உள்ளதாகவும், உத்தரபிரதேசம் ரூ.100 கொடுத்தால் ரூ.333.20 பைசா திருப்பி அளிக்கப்படுவதாகவும், மத்திரபிரதேசம் ரூ.100 தந்தால் ரூ.279.10 பைசா கொடுப்படுவதாகவும் கூறப்படுகிறது. இறுதியில் மாற்றத்தை விரும்பும் சாதாரண குடிமகன் என போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ள பீகார், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பாஜ அரசு ஆட்சியில் உள்ளது குறிப்பிடதக்கது.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்