ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் தமிழக எம்.பி.க்களுக்கு அவமதிப்பு.. ஜோதிமணி, தர்மர், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக பாஜக-வினர் அத்துமீறல்!!

சிவகங்கை: தமிழ்நாடு முழுவதும் புதிய வசதிகள் கொண்ட ரயில் நிலையங்கள் திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசும் போது பாஜகவினர் எதிர்ப்பு முழக்கங்களை கிளப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ரயில் நிலையம், அம்ரீத் பாரத் ரயில் விரிவாக்கத் திட்டத்தின் கீழ் புதிய வசதிகள் கொண்ட ரயில் நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. குளிர்சாதன பயணிகள் ஓய்வறை, மேம்பால நடைபாதை, மின்தூக்கிகள் உள்ளிட்ட வசதிகள் கொண்ட ரயில் நிலையத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் பேசும் போது பாஜகவினர் எதிர்ப்பு குரலிட்டனர். இதனால் கார்த்தி சிதம்பரத்திற்கு, பாஜக மாவட்ட தலைவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது இருகட்சி வாக்குவாதமாக மாறியதை அடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்து காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் பேசி சமரசம் செய்தனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ரயில் நிலையம் திறப்பு விழாவில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பங்கேற்று பேசினார். அப்போது ஒன்றிய பாஜக ஆட்சியில் பயணிகள் ரயில் கட்டணம் 4 மடங்கு உயர்ந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் கோபமடைந்த பாஜக-வினர் ஜோதிமணிக்கு எதிராக பாரத் மாதா ஹி ஜெ என்று முழக்கமிட்டனர். இதையடுத்து தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திவிட்டு விழாவில் இருந்து வெளியேறி அவரை பாஜக-வினர் சூழ்ந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர். காரில் ஏறிய பிறகும் ஜோதிமணியை மறித்து வாக்குவாதம் செய்த பாஜக பெண் நிர்வாகியை போலீசார் அழைத்து சென்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் பாதியிலேயே புறக்கணித்தார். விழா மேடையில் பாஜக செயற்குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் பாஜக நகர்மன்ற உறுப்பினர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டு அமரவைக்கப்பட்டு இருந்தனர். விழாவில் தர்மர் பேசிய பின்பும் பாஜகவினர் ஒவ்வொருவராக பேசி வந்தனர். இதனால் கோபமடைந்த மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு பாதியில் கிளம்பினார். ஒன்றிய அரசின் நிகழ்ச்சியில் தமிழ்நாடு எம்.பி.களுக்கு எதிராக பாஜக-வினர் முழக்கங்கள் எழுப்பிய சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

சென்னை குரோம்பேட்டையில் வேன் டயர் வெடித்ததில் வாகனம் தடுப்பு சுவரில் மோதி விபத்து

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உ.பி. மாநிலம் தேர்தல்; பாஜகவுக்கு 8 முறை வாக்களித்த சிறுவன்!