நம்பிக்கையுடன் செயல்படுவோம், வெற்றி பெறுவோம்!

வாழ்க்கையில் முன்னேற முதலில் நம்மை நாம் நம்ப வேண்டும். நாம் முடியாது முடியாது என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு விஷயமும் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒரு நபர் சாதித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாம் முன்னேற வேண்டுமானால் முதலில் நம்மிடம் இருக்கும் அச்சத்தை கைவிட வேண்டும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக நாம் ஒரு செயலில் இறங்கும்போது அது கடினமாகத்தான் இருக்கிறது என்று சிந்திக்காமல் நம்மை விட எத்தனையோ பேர் இதைவிட கடினமான வேலை செய்கிறார்களே, கஷ்டப்படுகிறார்களே எனச் சிந்தித்துக்கொண்டு செயலில் இறங்கினால், அந்தச்சுமை நமக்குத் தெரியாது. முதலில் நாம் கடினமான பணி என்று நினைத்தது இப்போது எளிதாக மாறிவிடும். கடலின் ஆழத்தைக் கண்டு அச்சப்படுவதை மறந்துவிட்டு, நீச்சல் கற்றுக்கொண்டு தன்னம்பிக்கை பெறுவோம்.

சிறந்த தொழிலதிபர்கள்,சரித்திரத்தில் வாழும் தலைவர்கள், உலகம் போற்றும் அறிவியல் அறிஞர்கள் இவர்கள் எல்லாம் நம்மைப் போன்று இருந்தவர்கள்தான்.அவர்கள் அனைவரும் முன்னே எடுத்து வைத்த காலை பல தடைகள் வந்தபோதும் பின்னே எடுத்து வைக்காதவர்கள்.வலியை ஆற்றலாக முன்னெடுத்து வைத்தவர்கள். வாய்ப்புகளைப் பிரச்னையாக பார்க்காதவர்கள்.உலகில் சாதனையாளர்களின் வெற்றி மந்திரம் என்னவென்றால் 95 சதவீதம் பேர் செய்யத் தயங்கும் வேலைகளை நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையுடன் செய்யத் துணிவதுதான். இவ்வாறு துணிந்து செய்பவர்கள்தான் சிறந்த வெற்றியாளர்களாக, சாதனையாளர்களாக சரித்திரத்தில் இடம்பிடிக்கிறார்கள்.இதற்கு உதாரணமாக இந்த சாதனை பெண்மணியை சொல்லலாம்.அரங்கம் நிறைய மனிதர்கள். மேடையில் உயரமான ஒற்றை நாற்காலியில் அமர்ந்து, முகபாவனைகளுடன் பேசிக் கொண்டே இருக்கிறார் மேசூன் ஸயித்.பார்வையாளர்களிடமிருந்து வெடித்து கிளம்புகிறது சிரிப்புச் சத்தம்.அமெரிக்காவில் ஸ்டாண்ட் அப் காமெடி வழங்கும் பெண்ணாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார் மேசூன். அதுமட்டுமல்ல ஒரு எழுத்தாளராக, நடிகையாக,மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருப்பவராக பல முகங்களைக் கொண்டவர் மேசூன்.

பாலஸ்தீனத்தில் அகதிகளாக வசிக்கும் குழந்தைகளுக்கு தன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதியை செலவிட்டு கொண்டிருப்பவர் என்று பல சிறப்புகளையும் சமூக பொறுப்புகளையும் கொண்டவர் தான் மேசூன்.நியூஜெர்சியில் வசித்து வரும் 49 வயதான மேசூன் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்.இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சினையால் வெளியேறிய குடும்பங்களில் மேசூனின் குடும்பமும் ஒன்று. மூளை வாதத்துடன் பிறந்ததால், அவரது தலையும் உடலும் எப்போதும் ஆடிக்கொண்டே இருக்கும். எளிதாகப் பேச முடியாது. ஆனால், மேசூனின் குடும்பம் அவரை அக்கறையாகப் பார்த்துக் கொண்டது. மற்றக் குழந்தைகளை போலவே மேசூனையும் நடத்தினார் அவரது அப்பா. ஒவ்வொரு விஷயத்தையும் மகள் முயற்சி செய்யும்போது ‘உன்னால் முடியும்… என்று சொல்லிக் கொண்டே இருப்பார்.அதேபோல,’ என்னால் முடியும் நான் செய்துவிடுவேன் என்று மேசூனும் சொல்லிக் கொள்வார்.படிப்பு, நடிப்பு, நடனம் போன்ற வற்றில் மேசூன் கவனம் செலுத்தினார்.சிறந்த மருத்துவமும், யோகாவும் அவரது உடலை ஓரளவு முன்னேற்றின, பட்டப் படிப்புக்கு பிறகு அவர் ஆர்வம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திரும்பியது.சில காலங்களுக்குப் பிறகு ஸ்டாண்ட் அப் காமெடிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சீரியஸான அரசியல் பிரச்னைகளில் இருந்து கலகலப்பான குடும்பப் பிரச்சனைகள் வரை காமெடியில் கொண்டு வந்தார். இதனால் மேசூனின் நிகழ்ச்சிக்கு வரவேற்பு அதிகரித்தது. அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்ப காமெடிகளை மாற்றிக் கொண்டே இருந்ததால், எப்போதும் புதுமையான நிகழ்ச்சியாகவே இவருடைய நிகழ்ச்சிகள் அமைந்தன.

ஒருமுறை பாலஸ்தீனத்துக்குச் சென்றபோதுதான் அகதிகள் முகாம்களில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் பரிதாப நிலையை சந்திக்க நேர்ந்தது. போரால் கை, கால்களை இழந்து தவித்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் குழந்தைகளுக்கு மருத்துவம், கல்வி அளிக்க முடிவு செய்தார்.ஒரு அறக்கட்டளையை ஏற்படுத்தினார். வருடத்தில் மூன்று மாதங்கள் பாலஸ்தீனத்தில் தங்கி குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறார். இதற்காக தன்னுடைய வருமானத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறார் மேசூன்.ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு மேசூனுக்கு கிடைத்தது. அந்த திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்தார்.அது மட்டுமல்ல திரைக்கதையும் எழுதி வருகிறார். நியூயார்க் அரபு அமெரிக்க நகைச்சுவை விழாவை நடத்திவருகிறார்.ஒரு எழுத்தாளராக மனித உரிமை மீறலை பற்றி தொடர்ந்து பத்திரிகைகளில்
எழுதியும் வருகிறார்.

தன்னுடைய திறமையும், உழைப்பும் மட்டுமே காமெடி, திரைப்படம்,எழுத்து என்று வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ள வைத்திருக்கிறது என்று உறுதியாக சொல்கிறார் மேசூன். ஒருவேளை ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்தால் அந்த விருதுக்கு தனது உடல் குறைபாடு ஒரு காரணமாக இருக்குமேயானால் அவர் ஆஸ்கரை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. சாதாரணமானவர்களைப் போல் தன்னால் எளிதாக எந்தச்செயலும் செய்ய இயலாவிட்டாலும் கூட சலுகை பெறுவதில் உடன்பாடு இல்லை என்கிறார் மேசூன்.மாற்றுத்திறனாளிகள் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட பெரும்பாலானவர்களிடம் இல்லை என்று வருத்தப்படும் மேசூன், சாதாரண மனிதரைப் போல மாற்றுத் திறனாளியையும் மதிக்க வேண்டும், அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து தரவேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் நலனுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார் மேசூன்.நம்பிக்கை மட்டும் இழந்துவிடாமல் இருந்தால் எங்கு பிறந்திருந்தாலும், எச்சூழலில் வளர்ந்தாலும், என்றாவது ஒருநாள் வெற்றி பெற்றே தீருவோம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் சாதனை மங்கை மேசூன். எனவே என்னால் முடியாதது, யாராலும் முடியாது. யாராலும் முடியாதது என்னால் முடியும் என நம்பிக்கையுடன் செயல்படுவோம், வெற்றி பெறுவோம்.

Related posts

சட்டசபை தேர்தல் முடிவுகள்; அருணாச்சலில் பாஜ, சிக்கிமில் எஸ்கேஎம் ஆட்சி: சிக்கிமில் பாஜக, காங்கிரசுக்கு ஒரு இடம் கூட இல்லை

இடைக்கால ஜாமீன் காலம் நிறைவடைந்த நிலையில், திகார் சிறைக்கு புறப்பட்டார் கெஜ்ரிவால்

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு