வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் மரக்கிளைகள்: உடனே அகற்ற வலியுறுத்தல்

கூடுவாஞ்சேரி: வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் நீட்டிக் கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்ற உயிரியல் பூங்கா நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி ஓஎம்ஆர் சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள ஏராளமான மரங்களிலிருந்து மரக்கிளைகள் சாலையில் நீட்டிக் கொண்டிருப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தாம்பரத்தில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா வழியாக கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான மாநகரப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவரோரத்தில் பழமை வாய்ந்த ஏராளமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் உள்ள மரக்கிளைகள் வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி செல்லும் சாலையில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் வாகனங்களின் மேல்பகுதியிலும், பக்கவாட்டிலும் கிளைகள் உரசுகிறது. இரவு நேரங்களில் பொருட்கள் மற்றும் எந்திரங்களை ஏற்றிக்கொண்டு உயரமான வாகனங்கள் செல்லும்போது அவை கிளைகளில் மோதி விபத்து ஏற்படுகின்றன. இதனால் சுற்றுச் சுவரும் இடிந்து விழுகிறது.

மேலும் வண்டலூர் உயிரியல் பூங்கா சிக்னலில் இருந்து இடது பக்கம் திரும்பும் இடத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக எல்லை குறித்த பெயர்ப் பலகை நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுசேரி, புதுப்பாக்கம், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், மாமல்லபுரம், திருப்போரூர் ஆகிய பகுதிகள் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையையும் மரக்கிளைகள் மறைத்து கொண்டிருக்கின்றன. இதனால் இந்த சாலை எந்த பகுதிக்குச் செல்கின்றது என்பது குறித்து தெரிந்து கொள்ள முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில் வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்றுச் சுவரை ஒட்டியபடி 2 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையில் மரக்கிளைகள் நீட்டிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த பெயர்ப் பலகையை மரக்கிளைகள் மறைத்துக் கொண்டிருப்பதால் இந்த சாலை எந்த பகுதிக்குச் செல்கிறது என்பது குறித்து தெரியாமல் தொலைதூரத்தில் இருந்து வருபவர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு அங்குள்ள போக்குவரத்து போலீசாரை கேட்டு தெரிந்து கொண்டு செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இப்பகுதியில் பெரும் விபத்து ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் சாலையில் நீட்டிக் கொண்டிருக்கும் மரக்கிளைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்