பராமரிப்பு பணிக்காக கண்ணாடி மாளிகை மூடல் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலா பயணிகள்

ஊட்டி: பராமரிப்பு பணிக்காக ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகை மூடப்பட்டுள்ளதால் மலர் அலங்காரத்தை காண முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 சதவீதம் பேர் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர். குறிப்பாக, கோடை காலத்தில் பல லட்சம் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவிற்கு வந்துச் செல்கின்றனர்.

இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்படும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்துக் காணப்படும். இது தவிர எப்போதும் கண்ணாடி மாளிகையைில் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். தற்போது மலர் கண்காட்சிக்காக பூங்காவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், பூங்காவில் மலர்கள் இன்றி காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரம் தொட்டிகளை கொண்ட மலர் அலங்காரங்களை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.

மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், தற்போது கண்ணாடி மாளிகை பராமரிப்பு பணிகளும் துவக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த மலர் தொட்டிகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. புதிதாக மலர் தொட்டிகள் கொண்டு அலங்காரப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, தற்போது கண்ணாடி மாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. கண்ணாடி மாளிகைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகையில் உள்ள மலர் அலங்காரங்களை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். அதேபோல், பராமரிப்பு பணிக்காக பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானமும் மூடப்பட்டுள்ளது. இதனால், புல்மைதானத்திற்குள் செல்ல முடியாத நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

Related posts

பலாப்பழத்தை பறிக்க மரத்தை முட்டியபோது மின்கம்பி அறுந்து விழுந்து காட்டு யானை பலி

கோடை மழை கொட்டியும் நீர்வரத்து குறைவு; பெரியாறு அணைக்கு வரும் நீரை திசை மாற்றுகிறதா கேரளா?; தமிழக விவசாயிகள் குற்றச்சாட்டு

பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரம்; ரூ.100 கோடி தருவதாக கூறினேனா?: டி.கே.சிவகுமார் ஆவேசம்