பயணிகள் வருகை அதிகரிப்புகளை கட்டிய சுற்றுலா தலங்கள்-வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி : தொடர் விடுமுறையையொட்டி ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். கோடை வெயில் சமவெளிப்பகுதிகளில் சுட்டெரிக்கும் நிலையில், அங்குள்ள மக்கள் ஊட்டிக்கு படையெடுக்க துவங்கிவிட்டனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு, ஒரு சில பள்ளிகளில் முழு ஆண்டு தேர்வு நிறைவு, வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு என தொடர் விடுமுறை நாட்கள் கிடைத்த நிலையில் நேற்று முன்தினம் முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

இதனால், ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள லாட்ஜ், காட்டேஜ்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.நேற்று ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. சுற்றுலா பயணிகள் கூட்டத்தால், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. மேலும் தொட்டபெட்டா, பைக்காரா படகு இல்லம் மற்றும் நீர் வீழ்ச்சியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் ஊட்டி நகரில் போதிய பார்க்கிங் இன்றி வானங்களை நிறுத்த முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். அதே போல் ஓட்டல்களில் மதிய உணவிற்காக சுற்றுலா பயணிகள் பல நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஊட்டி நகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.

Related posts

கோடைக்காலத்தையடுத்து இந்தாண்டு மோர் விற்பனை 25 சதவீதம் அதிகரிப்பு: ஆவின் நிர்வாகம் தகவல்

தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை

வேலூரில் இன்று 110.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு