சுற்றுலா ஆட்டோ மீது கார் மோதியது இங்கிலாந்து பயணிகள் 2 பேர் காயம்: கல்பாக்கம் அருகே பரபரப்பு

சென்னை: கல்பாக்கம் அருகே சுற்றுலா ஆட்டோ மீது கார் மோதியதில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் படுகாயமடைந்தனர். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 14 பேர், கடந்த 6ம் தேதி இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அனைவரும் கேரளா மாநிலத்தை சுற்றிப்பார்த்துவிட்டு அங்கிருந்து சில நாட்களுக்கு முன் புதுச்சேரிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் 7 சுற்றுலா ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தி புதுச்சேரி கடற்கரை, ஆரோவில் உள்ளிட்ட பல இடங்களை சுற்றி பார்த்துவிட்டு அங்கிருந்து சென்னைக்கு அனைவரும் புறப்பட்டனர். இவர்கள், கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியில் வந்தபோது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச்சென்ற ஒரு கார் அங்கு வரிசையாக சென்ற ஒரு ஆட்டோவின் மீது மோதியது.

இதில் அந்த ஆட்டோவில் பயணம் செய்த ஜார்ஜ் பியர்ஷன் (25) என்பவரின் கால் எலும்பு முறிந்தது. மற்றொரு பயணி ஜியோ எரிட் (26) லேசான காயமடைந்தார். தகவலறிந்த கூவத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸில் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

  • இங்கிலாந்து பயணியை நெகிழவைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
    விபத்தில் காயமடைந்த ஜார்ஜ் பியர்ஷனை ஆம்புலன்ஸில் ஏற்றினர். ஆனால் அவர் சுமார் 7 அடி உயரம் இருந்தார். 6 அடி கொண்ட படுக்கையில் அவரை படுக்க வைக்க முடியவில்லை என்பதால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்க மிகவும் சிரமப்பட்டனர். எனவே ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இங்கிலாந்து பயணியை தங்களது மடியில் படுக்கவைத்து சிகிச்சை அளித்தனர். இச்சம்பவம் இங்கிலாந்து பயணியை நெகிழ்ச்சியுறச் செய்தது.

Related posts

ஐதராபாத்தை அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி!

கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழ்நாடு அரசு

பாவூர்சத்திரத்தில் நடுவழியில் பஞ்சராகி நின்ற ஒன் டூ ஒன் அரசு பஸ்: பயணிகள் அவதி