தொடர்கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.14) விடுமுறை அறிவிப்பு


சென்னை: தொடர்கனமழை காரணமாக 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.14) விடுமுறை அறிவிக்கப்பட்டது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் அநேக இடங்களிலும், உள்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (14.11.2023) ஒருநாள் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய 2 தாலூகாக்களில் உள்ள பள்ளிகளுக்கும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்ட எல்லைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் மட்டும் இன்று (14.11.2023) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தொடர் மழை காரணமாக இன்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இன்று நடைபெற இருந்த பட்டயத் தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

2018 தேர்தல் வேட்பு மனுவில் ரகசிய மகளின் பெயரை மறைத்த இம்ரான் கான்: உச்ச நீதிமன்றத்தில மேல்முறையீடு

காசா மக்களுக்கு உதவிகள் கிடைப்பதற்கு பகல் நேரத்தில் சண்டை நிறுத்தம்: இஸ்ரேல் அறிவிப்பு

காதலுக்கு வயது தடையில்லை 80 வயது தாத்தாவை காதலித்து மணந்த 23 வயது இளம்பெண்