திருவாரூர் மாவட்டத்தில் மழையால் அழுகும் பருத்தி, எள் பயிர்கள்-விவசாயிகள் கவலை

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கொட்டிய கனமழையால் பருத்தி மற்றும் எள் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடியும் அதற்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் உளுந்து சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது மாற்று பயிர்களையும் பயிரிடும் நிலைக்கு மாறியுள்ளனர்.

அதன்படி நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக பச்சை பயிறு மற்றும் பருத்தி பயிர், வாழை, கரும்பு, கடலை, மரவள்ளி கிழங்கு உட்பட பல்வேறு பயிர்களையும் சாகுபடி செய்யத் தொடங்கியுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமாக 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே பருத்தி சாகுபடி செய்து வந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்தாண்டில் இந்த பருத்தி பயிர் இருமடங்கை விட கூடுதலான அளவில் அதாவது 40 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டது.

இவை வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஏல முறையில் கொள்முதல் செய்யப்பட்டது. இதன்படி கடந்தாண்டு அதற்கு முன் இல்லாத வகையில் அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12 ஆயிரம் வரை விலை கிடைத்தது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனால் தற்போது பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டியுள்ளனர். நடப்பாண்டு 41 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ளனர்.

இதேபோல் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் வலங்கைமான் உள்ளிட பல்வேறு பகுதிகளில் எள் சாகுபடியானது 12 ஆயிரத்து 500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் அவ்வப்போது பெய்து வந்த மிதமான மழையால் பருத்தி மற்றும் எள் பயிர்களை மழை நீர் சூழ்ந்திருக்கிறது. இப்பயிர்களுக்கு அதிகப்படியான தண்ணீர் தேவையில்லை. தற்போது தேங்கியுள்ள மழைநீரால் இப்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

Related posts

கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு

கோத்தகிரி அருகே ஒற்றை காட்டு யானை முகாம்; விவசாயிகள் கடும் அச்சம்

பந்தலூர் பஜாரில் கழிவுநீர் கால்வாய் அமைத்தும் பயனில்லை