திருப்பத்தூர் பஸ்நிலையத்தில் பரபரப்பு முறைகேடாக பயன்படுத்திய 57 எடை தராசுகள் பறிமுதல்-தொழிலாளர் ஆணையர் திடீர் ஆய்வில் அதிரடி நடவடிக்கை

ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் பஸ் நிறுத்தம் பகுதியில் தொழிலாளர் ஆணையர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 57 எடை அளவு தராசுகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.சென்னை தொழிலாளர் ஆணையர் ஆணைகளின்படி, திருப்பத்தூர் கலெக்டர் தெ. பாஸ்கர பாண்டியன் அறிவுரையின்படி திருவண்ணாமலை, தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் ஆகியோர் இணைந்து பொது மக்களின் புகார் அடிப்படையில் திருப்பத்தூர் பூமார்க்கெட் மற்றும் சந்தை பகுதிகளில் முத்திரையிடப்படாத எடையளவுகளை சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் நேற்று திடீர் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

அப்போது முறைகேடாக பயன்படுத்தப்பட்ட எடைகற்கள்-24, ஊற்றல் அளவை-3, மேஜை தராசு-6, மின்னனு தராசு-24 ஆகிய 57 எடையளவுகள் பறிமுதல் செய்தனர். முரண்பாடுகள் கண்டறியப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டமுறை எடையளவு சட்டத்தின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குளிர்பானங்கள் விற்பனை நிலையங்கள், சூப்பர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான பணிக்குழு உறுப்பினர்களுடன் இணைந்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைபடுத்துதல்) சட்டம், 1986-ன் கீழ் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்களிடையே குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்துவது குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைபடுத்துதல்) சட்டம், 1986-ன்கீழ் குற்றம் என்றும், சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தும் நபர்களுக்கு நீதிமன்றத்தால் ₹20 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறைதண்டனை அல்லது இரண்டும் சேர்ந்தோ தண்டனை வழங்கப்படும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என திருவண்ணாமலை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சீ. மீனாட்சி தெரிவித்தார். மேலும் இந்த ஆய்வின்போது துறை அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Related posts

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்..!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை கைதுகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு!!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!!