திருச்செந்தூரில் ஆவணி திருவிழா; சுப்பிரமணிய சுவாமி பச்சை சாத்தி வீதியுலா

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா, கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் மாலையில் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி தங்கசப்பரத்தில் முன்பக்கம் சிவன் அம்சமாகவும், பின்பக்கம் நடராஜர் அம்சமாகவும் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
நேற்று 8ம் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 6.30 மணிக்கு வெள்ளை சாத்தி பெரிய வெள்ளிச்சப்பரத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்ந்தார்.

தொடர்ந்து மண்டகப்படி மண்டபத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் 12 மணிக்கு பச்சைசாத்தி, பச்சைக் கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். இன்று செவ்வாய்கிழமை காலை சுவாமி குமரவிடங்கப் பெருமானும், சுவாமி அலைவாயுகந்த பெருமானும் தனித்தனி வெள்ளிக்குதிரையில் எழுந்தருளி திருநெல்வேலி சாலையில் உள்ள வேட்டைவெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தி, வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்கின்றனர். 9ம் திருவிழாவை முன்னிட்டு சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளியம்மன் பகலில் தனித்தனிப் பல்லக்கிலும், இரவு சுவாமி தங்கக் கயிலாய பர்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக்கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், நாளை (13ம் தேதி) நடக்கிறது. காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கி பிள்ளையார் ரதம், சுவாமி தேர், அம்மன் தேர்கள் வீதியுலா வந்து நிலை சேர்கிறது. செப்.14ம் தேதி சுவாமி, அம்மன் மாலையில் யாதவர் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி இரவு தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்து சேர்கின்றனர். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி வீதியுலா வந்து மேலக்கோயில் சேர்கின்றனர். 12ம் திருவிழாவை முன்னிட்டு 15ம் தேதி மாலை சுவாமி மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் வீதியுலா வந்து, வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்தர் முதலியார் மண்டபத்திற்கு சேர்கிறார். அங்கு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி, அம்மன் தனித்தனி மலர்க்கேடயச் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேர்ந்து திருவிழா நிறைவடைகிறது.

Related posts

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும்: ஒன்றிய அரசு

தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி

3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றார்