திருவலம் பொன்னையாற்று மேம்பாலத்தில் 2 ஆண்டுகளாக எரியாத மின்விளக்குகள்

*சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவலம் : திருவலம் பொன்னையாற்று மேம்பாலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக எரியாத 10 மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடி தாலுகா, திருவலம் பொன்னையாற்றின் குறுக்கே 85 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரா இரும்பு பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இரும்பு பாலத்தில் கனரக வாகனங்கள் சென்று வந்ததால் வலுவிழந்து வந்தது.

இந்நிலையில் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் கடந்த 2007ம் ஆண்டு பொன்னையாற்றின் குறுக்கே புதிய மேம்பாலம் திறக்கப்பட்டது. தொடர்ந்து, பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்பட்டதால் பாலத்தில் 10 மின்விளக்குகள் அமைக்கப்பட்டு பிரகாசமாக எரிந்து வந்தது. மின்விளக்குகளை ராணிப்பேட்டை மாவட்டம் சீக்கராஜபுரம் ஊராட்சி நிர்வாகம் பராமரித்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக 10 மின்விளக்குகள் எரியாமல் பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பைக் மற்றும் சைக்கிள்களில் மிகுந்த அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். பாலத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பல்வேறு சமூக விரோத செயல்களுக்கும், வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகிறது.
மேலும், பாலத்தில் இரவு நேரங்களில் விபத்துகள் ஏதேனும் நிகழ்ந்தால் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உடமைகளை அடையாளம் காண முடியாமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவ்வழியாக சென்றுவர தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும், தற்போது இரும்பு பாலத்தின் சாலையில் சீரமைக்கும் பணிக்காக போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பலாப்பழக்காரரின் ரகசிய ஆலோசனை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கொடைக்கானல் ஏரிக்குள் பாய்ந்த கார்

புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு