திருமாலின் திருவடி சேர்ப்பிக்கும் திருக்கச்சி நம்பிகள்

மல்லிகையின் மையத்தில் உதித்தாள் பாற்கடல் நாயகி. பூவிலிருந்து மலர்ந்ததால் புஷ்பவல்லி எனும் நாமம் ஏற்றாள். குளிர்ந்த மலர்கள் மலிந்த ஒரு தலத்தினில் அமர்ந்தாள்.அத்தலத்தை எல்லோரும் பூந்தண்மல்லி என்று சிரசின் மீது கரம் உயர்த்திக் கூப்பினர்.மல்லியின் வாசம் பக்தர்களை அருகே அழைத்தது. கேட்காமலேயே கூடை கூடையாக கொட்டிக் கொடுத்தது. பூந்தண்மல்லி பூவிருந்தவல்லியின் நிரந்தர வாசம் செய்யும் தலமானது. வரதனும் புஷ்பவல்லிக்கு அருகே அமர்ந்தான் அந்த ஊரின் வைசிய தம்பதியான திரு வீரராகவரையும், மதி கமலையாரையும் இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கமலையாரின் மணிவயிற்றில் சட்டென்று ஓர் மல்லி மலரத் துவங்கியது. அவளை அருள் மணம் சூழ்ந்தது. தம்பதியருக்கு நான்காவது திருக்குமாரன் ஜனித்தான். காஞ்சி வரதனின் கருணையால் தோன்றிய திருக்குமாரனுக்கு திருக்கச்சி நம்பிகள் எனும் திருப்பெயரிட்டார்கள்.

வைசிய குலம் காண்பித்த பொருள் சேர்க்கும் வழியை பால பருவத்திலேயே மனதிலிருந்து அறுத்தார் திருக்கச்சி நம்பிகள். அவருக்கு ஆதரவாக திருமழிசை ஆழ்வாரும் கனவில் தோன்றினார். நம்பிகளின் அகமும் முகமும் அருட்செழிப்பு பூண்டது. ‘‘பெரியாழ்வாரைப் போல மலர் வனம் அமைத்து கச்சி வரதனுக்கு பூமாலை தொடுத்துப் போடேன்’’ என்றார். ஆஹா… என் பாக்கியம் என்று கண்ணீர் சொரிந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிவரதனைக் கண்டு அளவிலா ஆனந்தமுற்றார். அர்ச்சாவதார மூர்த்தியாக விளங்கும் அத்திகிரி வாசன் வரதராஜன் மெல்ல திருவாய் உவந்து ‘‘உனது தொண்டினால் உவந்தோம் நம்பி’’ என்றார். தாங்களுக்கு செய்யும் திருத்தொண்டு தவிர வேறெதற்கும் இந்த ஜென்மம் இல்லை தேவராஜனே என்றார். பெருமாளும், நம்பிகளும் சகஜமாக பேசிக்கொண்டார்கள்.

சந்தேகித்து புருவம் சுருக்கி கேட்டோருக்கு அவன் எல்லோருக்கும் எளியன். அதே சமயம் இனியன். உங்களுடனும் பேசுவான் என்று வெள்ளையாகப் பதிலுரைத்தார். அவருக்குள் புஷ்பவல்லித் தாயார் வெண்மையாகச் சிரித்தாள். செல்லுமிடங்களிலெல்லாம் வரதனின் வாசத்தை சுமந்து பரப்பினார். தானே எம்பெருமானோடு பேசினும் குருவருளின் தனிப்பெருமையையும் உணர்ந்திருந்தார்.நாதமுனிகளின் பேரனான ஆளவந்தாரைக் குருவாக அடைந்து அவரின் திருவடியை சேவிக்கும் பாக்கியத்தை தா வரதா என்று வேண்டினார். திருவரங்கப்பெருமான் கச்சி நம்பிகளை கருணை கூர்ந்து நோக்கினார். கால்நடையாகவே அரங்கனின் நாமத்தைப் பாடியபடி ரங்கம் அடைந்தார். திருக்கச்சி நம்பிகளின் வருகையை அறிந்த பெரிய நம்பிகள் அவரைப் பல முதலிகள் சூழ எதிர்கொண்டு அழைத்தார்.

வரதரோடு பேசும் திருவாயால் பெரிய நம்பிகளை நோக்கி, எங்கிருக் கிறார் என்னைக் கொண்டுபோய் ஆளவந்தாரின் திருவடிகளை காணச் செய்வீரா என்று கேட்டார். பெரிய நம்பிகள் பிரமித்தார். வரதனையே வா என்று அழைத்தவர், ஆளவந்தாரை பார்க்கத் துடிக்கும் ஆவலைக் கண்ணுற்று கனிவானார்.நம்பிகளின் ஆழ்மனதை அறிந்த ஆளவந்தாரே கன்றுக்குட்டியை பிரிந்த பசுபோல தவித்து தானே முன் வந்தார். இன்னதென விளக்க முடியாத ஓர் அருட்சக்தியும், பேரின்ப அவஸ்தையில் அவர்கள் இருவரும் சந்தித்தனர். ஆளவந்தார் திருக்கச்சி நம்பிகளை ஆசிர்வதித்தார். பேரருள் சூழ்ந்து நிற்கும் தமது சிஷ்யரைப் பார்த்து பேரருளாளதாசர் எனும் திருப்பெயரிட்டு மகிழ்ந்தார்.

இப்பேற்பட்ட ஓர் குருவின் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்த பெரியநம்பிகளுக்கு தொண்டர் அடிப்பொடியராக சேவை செய்யும் பாக்கியத்தை கேட்டார், திருக்கச்சி நம்பிகள். பெரிய நம்பிகளின் திருமாளிகையின் பசுக்களை தினமும் மேய்க்கும் பணியினை மேற்கொண்டார். இதென்ன விந்தை என மக்கள் நெக்குருகிப் பேசினர். அனுதினமும் அரங்கனை சேவித்தார். திருஆலவட்ட கைங்கர்யம் எனும் விசிறி வீசும் தொண்டுக்கு தன்னை அருளும்படி கேட்டுக் கொண்டார். வரதன் போலவே அரங்கனும் பேசினான். காவிரியின் குளிர் தென்றல் எமக்குப் போதுமானது, திருமலை வேங்கடனுக்கு வேண்டுமானால் ஆலவட்டச் சேவை செய்யேன் என்றான். திருவேங்கடத்திற்கு சென்று தன் திருவுளத்தை வெளிப்படுத்தினார்.

மேகங்கள் சூழப்பெற்று மெல்லிய தென்றல் எப்போதும் வீசிக் கொண்டிருப்பதால் ஆலவட்டக் கைங்கர்யம் தம்மை விட காஞ்சி வரதனுக்கே சரியாகும் என்றார். வேள்விக் குண்டத்திலிருந்து தோன்றிய தேவராஜனான வரதராஜனுக்கு ஆலவட்டக் கைங்கர்யம் செய்வதே சரி என்று விளக்கினார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரம் திரும்பினார். தேவப்பெருமாளுக்கு விசிறி வீசி தொண்டு செய்தார். மறைந்திருந்த ஞானாக்னி விசிறியின் காற்றால் பிழம்பாக கனிந்தது. அவரின் அருகே வருவோரின் நெஞ்சத்துத் தணலை ஊதி ஊதி தணிவித்தார். வரதனின் விளையாட்டு லீலைகள் பலப்பல இவரின் மூலமும் தொடர்ந்தது. நம்பிகள் தமக்கு பரம பதத்தை அருள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தம் திருமடம் திரும்பிய திருக்கச்சி நம்பிகள் தமது குருவாகிய ஆளவந்தாரின் திருவடிகளை நினைந்தபடி தம் 55 வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். பூவிருந்தவல்லி எனும் பூவை தந்த மலர் உலகம் முழுதும் வாசத்தை பரப்பியது. அவரின் திருக்கைகளில் விசிறியோடு காத்திருக்கிறார். சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகில் வரதராஜப் பெருமாள் கோயிலில் உறையும் திருக்கச்சி நம்பிகளைச் சேவித்து வாருங்கள்.

ஜெயசெல்வி

Related posts

மாணவர்கள் கல்வியில் மேம்பட என்ன செய்யலாம்?

கலி முற்றி எங்கெங்கும் துன்பங்களும் துயரங்களும் சூழ்ந்துள்ள இன்றைய உலகின் முக்கியத் தேவை என்ன?

மேலைச் சிதம்பரம்