தியாகேசா, ஈஸ்வரா கோஷங்கள் முழங்க திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பிரமோற்சவ தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: தியாகேசா, ஈஸ்வரா கோஷங்கள் முழங்க திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் பிரமோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக இன்று காலை நடந்தது. காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பகவானை தரிசிக்க தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பிரமோற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் கடந்த 16ம் தேதி துவங்கியது. தொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (30ம் தேதி) காலை 5.30 மணிக்கு நடந்தது. அலங்கரித்து வைத்திருந்த பெரிய தேரில் தியாகராஜர் எழுந்தருளினார். தேரை வடம் பிடித்து புதுச்சேரி நுகர்பொருள் விவகாரங்கள் துறை அமைச்சர் சரவணகுமார், கலெக்டர் குலோத்துங்கன், எம்எல்ஏ சிவா ஆகியோர் துவக்கி வைத்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தியாகேசா, ஈஸ்வரா என கோஷங்களை முழங்கியவாறு தேரை இழுத்து சென்றனர்.

விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி தியாகராஜர் தேருக்கு பின்னால் வரிசையாக வலம் வந்தனர். நான்கு ரத வீதிகளில் வலம் வந்து நிலையை 5 தேர்களும் அடைந்தது. நாளை இரவு சனி பகவான், தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா, ஜூன் 1ம் தேதி தெப்போற்சவம் நடக்கிறது. கோயில் தேரோட்ட விழாவையொட்டி திருநள்ளாறு பகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

Related posts

அரியானாவில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பக்தர்கள் உடல் கருகி பலி

பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

நெல்லை அம்பாசமுத்திரம் அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை சிக்கியது