மிக்ஜாம் புயல் பாதிப்பு: தமிழக அரசு கோரும் நிவாரண உதவிகளை, நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தரமணியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நிவாரணம் வழங்கினார். தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளை சார்ந்த குழுவினர் இந்த பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெள்ளம் பாதித்த சென்னை தரமணி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார். அப்போது வெள்ள பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; ”மிக்ஜாம் புயலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு எடுத்து கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானது கிடையாது. மழைநீர் வடிகால்களை கடந்த ஆட்சியாளர்கள் முற்றலும் நாசமாக்கிவிட்டார்கள். தமிழக அரசு கோரும் நிவாரண உதவிகளை, நிதியை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இனியும், சென்னை வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ளாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவநிலை மாற்றங்களால் மழை வெள்ளம் வரும்முன் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை. ஒவ்வொரு வார்டுக்கும் மருத்துவ முகாம்களை நடத்தி தொற்று நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

அவதூறு வழக்கில் ராகுல்காந்தி 7ம் தேதி ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

சீட் கொடுக்காததால் விரக்தி; நான் பாஜகவில் தான் இருக்கிறேன்: நடிகையான மாஜி எம்பி பேட்டி

இந்தியாவுக்கே சவால்விடும் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகின்றார்: கி.வீரமணி பேச்சு